இனி கம்முனு இருந்தா வேலை ஆகாது… திமுக அரசுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2024, 2:28 pm

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மேலவளவில் பலியான சம்பவத்திற்கு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலவளவில் ஊராட்சி தலைவராக தலித் வந்ததால் 1997-ல் படுகொலை நடந்தது. கள்ளச்சாராயம், நச்சு சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வு பூரண மது விலக்கு மட்டுமே. டாஸ்மாக் கடையிலும் பாதிப்பு உள்ளது. தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மது விலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால், பூரண மது விலக்கு என்பதே தீர்வு. பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவு. அயோத்தி கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.

நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் மாணவர்களை கோபப்படுத்தும் முறையாகவே நான் பார்க்கிறேன். அதில் பிழையும், உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியது மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். கள்ளுக் கடைகள் திறப்பதன் மூலம் கள்ளச்சாராய சாவுகள் தடுக்கப்படுமா? காந்தியடிகள் கள் உள்பட எந்த மதுவும் வேண்டாம் என்று தான் கூறி உள்ளார். தமிழக அரசு முதலில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான். முதல்வர் டாஸ்மாக் கடையை மூடினால் மக்களிடம் ஆட்சிக்கு நல்ல பெயரும் ஏற்படும். ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனி உளவு பிரிவு தொடங்க வேண்டும். பூரண மது விலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தகைள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று கட்சி சார்பில் மிகப் பெரிய மகளிர் மாநாடு நடைபெற உள்ளது என கூறினார்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…