நகை அடகுகடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை… ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்… துப்பு துலக்கிய போலீஸ்..!!
Author: Babu Lakshmanan24 May 2022, 10:46 am
காட்பாடி சேர்க்காட்டில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேர்க்காடு கூட் ரோட்டில் மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டு, இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்தனர்.
அப்போது, மர்ம நபர்கள் கடையின் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று, நகை அடகு கடையின் சுவற்றை உடைத்து உள்ளே சென்று, சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை தொடர்பாக திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு ஒரு தகவலையும், செய்தியாளர்களுக்கு ஒரு தகவலையும் கடையின் உரிமையாளர் கூறுகிறார். எட்டு ஆண்டுக்கு முன்னர் இதே போன்று இதே நபரின் கடை மேல்பாடியில் திருடு போனது என்பதும் குறிப்பிடத்தக்கது
0
0