ராகுலை சிக்க வைத்தது, குஷ்புவா?…அரசியல் களத்தில் புதிய மோதல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 8:07 pm
Rahul Vs kushboo - Updatenews360
Quick Share

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியை, கடுமையாக விமர்சனம் செய்வதாக நினைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பிரச்சாரத்தில் “ஏன் அத்தனை திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று கட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அவதூறு வழக்கில் பதவி நீக்கம்

இது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த 23-ம் தேதி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து எம்பி பதவியில் இருந்து அவர் உடனடியாக தகுதிநீக்கமும் செய்யப்பட்டார்.

இதனால் அவர் சிறை செல்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்த ராகுல் “என்னை சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை. எந்தவித மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன்” என்று ஆவேசமாக கொந்தளித்து உள்ளார்.

தவிர தனது எம்பி பதவி பறிக்கப்பட்டதை தெரிவிக்கும் வகையில் தன் ட்விட்டர் ‘பயோ’வில் தகுதி நீக்கப்பட்ட எம்பி என்றும் ராகுல் காந்தி அதிரடியாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்கிடையே காங்கிரசார் நாடு முழுவதும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக சாலை மறியல், ரயில் மறியல்,உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம் என கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு போராட்டங்களில் குதித்துள்ளனர்.

ராகுல் கைதுக்கு காரணம் குஷ்புவா?

இந்த நிலையில்தான், ராகுல் இப்படி பேசுவதற்கு 2018ல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு அந்த ஆண்டின் பிப்ரவரி 15ம் தேதி பிரதமர் மோடி குறித்து, ட்விட்டரில் பதிவிட்ட ஒரு கருத்துதான் காரணமாக இருந்தது என்ற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் ஐந்தாண்டுகளுக்கு முந்தைய குஷ்புவின் அந்த ட்விட்டர் பதிவை தோண்டி எடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், திக்விஜய் சிங் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதுதான்.

வைரலாகும் பழைய ட்வீட்

அதில், “மோடி என்று பெயர் கொண்டவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். இனி மோடி என்றாலே ஊழல் என மாற்றி விடலாம். அதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். நீரவ், லலித், நமோ = ஊழல்” என குஷ்பு கூறியிருந்தார்.

சசிதரூர், குஷ்புவின் பழைய ட்வீட்டை ரீட்வீட் செய்து, “பாஜக எம்எல்ஏக்கள் யாரும் கண்டிப்பாக இதுபற்றி வழக்குத் தொடர மாட்டார்கள்” என்று நையாண்டியும் செய்துள்ளார். இதனால் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த புர்னேஷ் மோடி, குஷ்பு மீதும் வழக்குப்பதிவு செய்வாரா? என சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

2020-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தேசிய நிர்வாகிகள் குழுவில் உறுப்பினராகவும், கடந்த மாதம் முதல் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்புவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துவது வெளிப்படையாகவே தெரிகிறது.

அது காங்கிரஸ் கட்சியின் மொழி

இதற்கு நடிகை குஷ்பு சுடச் சுட பதிலும் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மோடி’ பற்றிய ட்வீட் குறித்து நான் வெட்கப்படவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக மட்டுமே எனது கடமையைச் செய்து வந்தேன். இது என்னுடைய மொழியல்ல. அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மொழியாகும்.

அப்போது நான் அந்தக் கட்சித் தலைவரைப் பின்பற்றி, அந்தக் கட்சியின் மொழியில்தான் பேசினேன். எல்லா மோடிகளையும் திருடர்கள் என்று சொல்லும் அளவிற்கு ராகுல் காந்தி தரம் தாழ்ந்து விட்டார். ஆனால், நான் மோடிகள் உடன் ஊழல் என்ற வார்த்தையை மட்டுமே ஒப்பிட்டேன். அதை காங்கிரஸ் கட்சியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தைரியம் இருக்கா? குஷ்பு சவால்!!

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு சவால் விடுகிறேன். நான் அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வேன். மேலும் காங்கிரஸ் கட்சி என் பழைய ட்வீட்டைப் பகிர்ந்து வருவது அவர்கள் எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது” என்று கேலியாக குறிப்பிட்டார்.

அத்துடன் ட்விட்டர் பக்கத்திலும், “எனது ட்வீட்டை நான் நீக்கப்போவது கிடையாது. இதுபோல பல ட்வீட்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வேறு வேலையில்லையென்றால், இன்னும் சில ட்வீட்களை கண்டுபிடிக்க உங்கள் நேரத்தைப் பயன்படுத்துங்கள். என்னையும், ராகுல் காந்தியையும் ஒரு விவகாரத்தில் காங்கிரஸ் எப்படி ஒப்பிட்டு பார்க்கிறது என்பதை காண விரும்புகிறேன். நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்று கூறிக்கொள்ளும் அவருக்கு இணையாக பெயரையும், மரியாதையையும் நான் சம்பாதித்திருக்கிறேன் என்ற உண்மையை மதிக்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு நன்றி” என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

“காங்கிரசின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுப்பதாக கருதிக் கொண்டு பாஜகவில் வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராக உள்ள நடிகை குஷ்புவை சீண்டிப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் என்று கூறுகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்களின் தவறு

“ஏனென்றால் குஷ்பு பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர் அல்ல. 2010ல் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்த அவர் நான்காண்டுகள்தான் அதில் நீடித்தார். அங்கு அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால் பின்னர் காங்கிரசில் சேர்ந்து 6 ஆண்டு காலம் அதில் இருந்தார். 2020ல் தான் பாஜகவில் இணைந்தார். அதனால் அவரை 25, 30 ஆண்டுகள் அரசியலில் உள்ளவர் போல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவருமே நினைத்தது முதலில் தவறு.

திக்விஜய் சிங் 54 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர். தனது கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்காக அவரும் வரிந்து கட்டு கொண்டு குஷ்புவை ரீ ட்விட் மூலம் தாக்கியிருக்கிறார்.

பொதுவாகவே அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் பணியே கட்சித் தலைமை சொல்வதைக் கேட்டு அதை அப்படியே ஊடகங்களுக்கு தெரிவிப்பதுதான். கட்சித் தலைவர்களின் அனுமதியின்றி அவர்களால் சுயமாக எதையும் ஊடகங்களிடம் பேசி விடவும் முடியாது.

அதனால்தான் காங்கிரஸில் இருந்தபோது தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப அப்போது, நான் பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக குஷ்பு கூறி இருக்கிறார். அவர் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான் என்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும்.

குஷ்பு சாமர்த்தியம்!

இதன் மூலம் ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்ததற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை மறைமுகமாக குஷ்பு சுட்டி காண்பித்தும் இருக்கிறார்.

தனது அன்றைய ட்விட்டர் பதிவை இப்போது காங்கிரஸ் தலைவர்கள் தேடி பிடித்து வெளியிடுவதால் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக கருதப்படும் ஒருவருக்கு இணையாக என்னை உயர்த்தி விட்டார்கள்.அவருக்கான மரியாதையையும் நான் சம்பாதித்திருக்கிறேன் அதற்காக காங்கிரசுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு பந்தை காங்கிரஸ் தலைமையின் பக்கமே குஷ்பு திருப்பி அடித்துவிட்டு
பதற வைத்து இருக்கிறார்.

நடிகை குஷ்பு சாமர்த்தியமாக பதிலடி கொடுத்து இருப்பதை பார்த்தால் அவர் அரசியலிலும் கை தேர்ந்து விட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது!

Views: - 330

0

0