சந்தானம் சரியாத்தானே சொல்றார்.. திராவிட ஹைனாக்கள் ஏன் கதறி ஒப்பாரி வைக்கறாங்க : சீண்டும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்!
Author: Udayachandran RadhaKrishnan17 ஜனவரி 2024, 11:42 காலை
சந்தானம் சரியாத்தானே சொல்றார்.. திராவிட ஹைனாக்கள் ஏன் கதறி ஒப்பாரி வைக்கறாங்க : சீண்டும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்!
நடிகர் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இடம் பெறக் கூடிய “யப்பா சாமீ இல்லைன்னு ஊருக்கு சுத்திகிட்டு திரிஞ்சயே அந்த ராமசாமிதானே நீ?” என்கிற வசனம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
தந்தை பெரியாரை விமர்சனம் செய்யும் வகையில் சந்தானம் படத்தின் வசனம் இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சந்தானம், தமது எக்ஸ் பக்க பதிவுகளையே நீக்கி இருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, சந்தானம் ஒரு சாதிய வன்மம் பிடித்த சங்கி; அதனால் திட்டமிட்டே தந்தை பெரியாரை விமர்சனம் செய்திருக்கிறார் என சாடியிருந்தார்.
மேலும் தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தானத்தை ஒரு தீய சக்தி என விமர்சித்திருந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சந்தானத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில், “சந்தானம் சரியாத்தானே சொல்றார் ! திராவிட ஹைனாக்கள் ஏன் கதறி ஒப்பாரி வைக்கிறார்கள் ? என பதிவிட்டுள்ளார். அத்துடன் சந்தானம் தமது எக்ஸ் பக்கத்தில் நீக்கிய வீடியோவையும் சாட்டை துரைமுருகன் மீண்டும் பகிர்ந்துள்ளார். தற்போது சாட்டை துரைமுருகனின் இந்த பதிவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. தந்தை பெரியாரை மிக கடுமையாக சீமான் உள்ளிட்டோர் விமர்சிக்கவும் செய்கின்றனர்;
தந்தை பெரியாரின் பிறந்த நாள், நினைவு நாளில் போற்றுகிற சமூக வலைதளப் பதிவுகளையும் வெளியிடுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீமான், தந்தை பெரியாரை புகழ்ந்து பதிவிட்டதற்கு அவரது கட்சியினரே கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0
0