மகளிர் உரிமைத் தொகை திட்டம்… என்னது மாஸ்டர் பிளானா? தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 6:18 pm

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து உரிமைத்தொகை திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க முதற்கட்ட விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமை தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விண்ணப்ப பதிவு அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான 2 ஆம் கட்ட விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மாதந்தோறும் சுமார் 1 கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்பதால் நிதி திரட்டுவதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திலும், வாகன ஓட்டிகளிடம் தினமும் ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என டார்கெட் விதித்து உத்தரவு போட்டிருப்பதாக ஒரு தவறான தகவல் பரவியது. இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், “31.07.2023 தேதியிட்ட ஒரு செய்தித்தாளில், மகளிர் உரிமைத்தொகை வழங்க “மாஸ்டர் பிளான்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு மாறானது.

மகளிர் உரிமைத் தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை. வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை.

இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!