சொந்தக் கட்சி எம்பிக்களே வைத்த கெடு.. பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா?
Author: Hariharasudhan25 October 2024, 1:31 pm
இந்தியா – கனடா கருத்து மோதல் இடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ பதவி விலக வேண்டும் என சொந்தக் கட்சி எம்பிக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஒட்டாவா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது. மேலும், கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை தாயகம் திரும்பக் கூறியது கனடா அரசு. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளையும் கனடாவை திரும்பப் பெற அறிவுறுத்தியது இந்தியா. இவ்வாறு இந்தியா – கனடா இடையே மனக்கசப்பு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா திரும்பப் பெற்ற கனடாவுக்கான தூதர் சஞ்சய் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு எதிராக கனடா அரசு நடவடிக்கை எடுக்காததே அவர்களை ஊக்குவிப்பதற்கு இணையானது என கருதுகிறேன். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அரசியல் ஆதாயத்திற்காக காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
மேலும், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தவறு. முழுமையான விசாரணையின் மூலமே உண்மை வெளி வர வேண்டும். நமது நாடு எதையும் திரைமறைவில் செய்யவில்லை. இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரத்தையும் கனடா காண்பிக்கவில்லை” எனத் தெரிவித்த சஞ்சய் வர்மா, கனடா அரசு இந்தியாவை முதுகில் குத்தி விட்டது என கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே கூட்டணி ஆட்சியின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூட்டோவின் தலைமையில், கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் ஜஸ்டின் தலைமையில் லிபரல் கட்சி எம்பிக்களின் ரகசியக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க : அயோத்தி விவகாரம் முதல் டெல்லி கலால் வழக்கு வரை.. யார் இந்த சஞ்சீவ் கண்ணா?
இந்தக் கூட்டத்தில், 25 முதல் 30 எம்பிக்கள் வரையில் பிரதமர் ஜஸ்டினிடம் தங்களின் குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அக்டோபர் 28ஆம் தேதியுடன் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூட்டோ விலக வேண்டும் எனவும் அவர்கள் கெடு விதித்துள்ளனர்.