விமான தளங்களை குண்டுவீசி அழிச்சாச்சு… 2 நகரங்கள் கைப்பற்றியாச்சு… மணிக்கு மணி மோசமாகும் உக்ரைனின் நிலை…!!
Author: Babu Lakshmanan24 பிப்ரவரி 2022, 2:32 மணி
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தங்களது நாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் நீண்டகால திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் பிரிவினைவாதிகளின் மூலமாக, உக்ரைனை ஆக்கிரமிக்கத் தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் ரஷ்யாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை பாதுகாத்துகொள்ள அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான ‘நேட்டோ’வின் உதவியை நாடியது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது.
மேலும், உக்ரைனில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும், லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனித்தனி நாடாக அறிவித்து, பிரிவினைவாதிகளின் ஆதரவை பெற்றார் ரஷ்ய அதிபர் புடின். இதைத் தொடர்ந்து, தனது ரஷ்ய படைகளை அந்த இரு பிராந்தியங்களுக்கு சென்று தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் விமான தளங்கள் உள்ளிட்டவை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். உணவு, தண்ணீர் கிடைக்காமல் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.
ஒருபுறம் தாக்குதல் நடத்திக் கொண்டே, மறுபுறம் உக்ரைனில் தங்களின் டாங்கிகள் உள்ளிட்ட ராணுவ ஆயுதங்களை ரஷ்யா உள்ளே நுழைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், பாராசூட் மூலமாகவும் வீரர்கள் உக்ரைனில் இறங்கி வருகின்றனர். ரஷ்யாவுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் கிழக்கில் உள்ள லுகான்ஸ்க் பகுதியில் 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். லுகான்ஸ்க் நகரில் ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அதிகம் பேர் வசிப்பதால் பிரிவினைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0