25 ஆண்டுகளாக கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுத்த திமுக : கருணாநிதி சிலையிடம் மனு கொடுத்து முறையிட்ட நிர்வாகிகள்

Author: kavin kumar
3 February 2022, 4:59 pm

மதுரை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்காத நிர்வாகிகள் மதுரையில் உள்ள கருணாநிதி சிலையிடம் மனு கொடுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் கட்சிக்கு 25 ஆண்டு காலம் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவிலும் பாஜகவிலும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் திமுகவினருக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் வேட்பாளர்களை தேர்வு செய்து இடங்களை ஒதுக்கி, வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் போட்டியிட சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாநகராட்சி 32 வது வார்டை சேர்ந்த கலையரசி, 27 வது வார்டை சேர்ந்த ராஜேந்திரன், 28வது வார்டை சேர்ந்த சரசு, 24 வது வார்டை சேர்ந்த முத்துமணி ஆகியோர் திமுகவில் 25 ஆண்டுகாலமாக கட்சிக்கு உழைத்து சீட் கேட்டும் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர்.

இதைதொடர்ந்து திமுக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தனது மருமகள் மற்றும் உறவினர்களுக்கு வார்டை ஒதுக்கி கட்சியினரை புறக்கணிப்பதாக கூறி சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலைக்கு திமுக நிர்வாகிகள் மனு கொடுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். திமுக மாவட்ட செயலாளர்கள் கட்சி அழிவுப்பாதைக்கு செல்வதாகவும், கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் ஆதங்கப்பட்டுள்ளனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?