‘என்றுமே மக்கள்தான் மன்னர்கள்’: ராஜா வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்…கோவையில் சுவாரஸ்யம்..!!

Author: Rajesh
4 February 2022, 3:04 pm

கோவை: கோவையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இன்று மன்னர் உடையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்துள்ளார்.

கோவை குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நூர் முகம்மது. இவர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 94 வது வார்டில் போட்டியிடுகிறார். இதற்காக குனியமுத்தூர் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு வந்த அவர் மன்னர் உடையுடன், வீர வாள் எடுத்து வந்தார்.

மேலும், தனது இருபுறங்களிலும் பாதுகாவலர் வேடமணிந்த இருவரையும் நிற்க வைத்தபடி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 1996ம் ஆண்டு முதல் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். 1997ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 6 வது வார்டு கவுன்சிலராக பதவியேற்றுள்ளேன்.

குறிச்சி பகுதி மக்களின் அடிப்படை உரிமைக்கு போராடியுள்ளேன். என்றாவது ஒரு நாள் மக்கள் சுயேட்சைக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா முழுக்க பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகின்றனர். மக்கள் பணம் வாங்கிவிட்டால் மன்னாராக இருக்க முடியாது. மக்கள் என்றும் மன்னர்கள் என்பதை உணர்த்த மன்னர் உடையணிந்து வந்துள்ளேன்.” என்றார்.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!