ஜூனியர் உலகக்கோப்பை…5வது முறையாக இந்திய அணி சாம்பியன்: சீனியர் அணி மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து..!!

Author: Rajesh
6 February 2022, 9:27 am
Quick Share

ஆன்டிகுவா: ஜூனியர் உலக கோப்பை இறுதி போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

14வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இதனையடுத்து ஜேம்ஸ் ரீவுடன், ஜேம்ஸ் சேல்ஸ் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் திரட்டினர். ஜேம்ஸ் ரீவ் 95 ரன்களில் வெளியேறினார்.

இதன்பின்னர் 190 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. எனினும், தொடக்க வீரரான ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவருடன் விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான ஹர்னூர் சிங் (21) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து விளையாடிய ஷேக் ரஷீத் அரை சதம் (50) விளாசினார். கேப்டன் யாஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

ராஜ் பாவா (35), கவுசல் (1) ரன்களில் வெளியேறினர். எனினும் நிஷாந்த் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு போராடினார். தினேஷ் (13) ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களை சேர்த்து வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றுள்ளது.

4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்து உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு சீனியர் இந்திய கிரிக்கெட் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Views: - 2169

0

0