மாற்றுத்திறனாளிகளை தடுக்க முள்வேலி அமைப்பதா…? மறந்து போயிடுச்சா…? தமிழக அரசு மீது கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!!

Author: Babu Lakshmanan
22 March 2022, 6:35 pm
Quick Share

தமிழகத்தில் இன்றைய ஹாட் டாப்பிக்கே தமிழக அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டதுதான். அண்டை மாநிலங்களான புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தமிழகத்தில் வழங்கப்படுவதை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது.

தங்களுக்கும் அதேப்போன்று உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்றிரவு முதலே சென்னைக்கு வரத் தொடங்கினர்.

ஆனால், இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் அவர்களை அந்தந்த மாவட்ட பேருந்து மற்றும் ரயில்நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்தந்த பகுதிகளிலேயே போராட்டத்தை நடத்தினர். அப்படியிருந்தும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர்.

இப்படி, மாற்றுத்திறனாளிகளை போலீசார் தடுக்க பயன்படுத்திய தடுப்புகள்தான் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மாற்றுத்திறனாளிகள் குச்சி வைத்தும், வழக்கத்திற்கு மாறான நடை பாவணைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர்களை தடுக்க பயன்படுத்தியிருந்த பேரிகார்டுகளில் முள்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் கண்டனத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது, ஒருவரின் துணையில்லாமல் நடக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், கைத்தடிகளை பயன்படுத்தி வருபவர்கள் என இதுபோன்று இருக்கும் மக்கள் நடத்துகின்ற போராட்டத்தில் போலீசார் இப்படித்தான் கையாளுவார்களா..? முள்கம்பி சுற்றப்பட்டிருக்கும் பேரிகார்டுகளால் மாற்றுத்திறனாளிகளுக்கு காயமோ அல்லது பாதிப்போ ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு..?

ஏற்கனவே, கோவையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது, விதிமுறைகளுக்கு மீறாக தடுப்புகளில் முள்கம்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டன.

அப்போதே, பேரிகார்டுகளில் இதுபோன்று முள்கம்பி பொறுத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா..? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனி இதுபோன்று நிகழாமல் அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும், எனக் கூறினர்.

இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினரும் தமிழக அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது, கடந்த அதிமுக ஆட்சியின் போது கோவையில் பேரிகார்டில் முள்கம்பி பொறுத்தப்பட்டிருந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததை இப்போது சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அப்போது, இது சட்டத்தின் ஆட்சியா..? மறியலை தடுக்க முள்கம்பி சட்டத்தில் இருக்கிறதா..? என்றும், முள்கம்பி ஆலோசனை சொன்ன அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி இருந்தனர்.

Image

தற்போது, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் முள்கம்பி உள்ள பேரிகார்டுகளை வைத்து போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இப்போது, அரசியல் கட்சியினர் வாய் திறக்காதது ஏன்..? மக்கள் நலனுக்காகவே அரசியல் செய்வோம் என்பதை உணர்ந்து, இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளில் அரசும், அரசியல் கட்சியினரும் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும், என்கின்றனர்.

Views: - 673

0

0