இனி, மின்வெட்டு இருக்காது… அதிலும் தொழிற்சாலைக்கு இல்லவே இல்ல… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
22 April 2022, 2:42 pm
Quick Share

தமிழகத்தில் நிலவி வரும் வரும் மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.குறிப்பாக இரவு நேரங்களில் போதுமான காற்றோட்டம் இல்லாமல் புலுக்கமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில், கோவை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. இதனால் மக்கள் புலுக்கம் தாங்க முடியாமல் கொசு கடியில் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

தொடர்ந்து, மின்வெட்டு காரணமாக தினந்தோறும் பள்ளி மாணவர்கள் வீட்டு பாடங்களை கற்பதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு வாரமாக இருளில் சிக்கி தவிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் மெழுகு வர்த்தி விளக்கை பயன்படுத்தி கொண்டு முன்னோர் காலத்தில் இருந்த வாழ்க்கைக்கு சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்கட்சியினர் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

அவர் பேசியதாவது :- மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் சில தினங்களாக மின்பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்திற்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. நிலக்கரியை இறக்குமதி செய்ய தேவையான ஏற்பாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த 2 மாதங்களுக்கு அதிக நிலக்கரி இறக்குமதி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

மின் பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து ஏற்பட்ட மின் இழப்பை ஈடுசெய்ய மாநில அரசின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கு மின்தடை எந்த சூழலிலும் ஏற்படாது, என்று கூறினார்.

அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Views: - 683

0

0