செல்போன் கடையில் சிகரெட் கேட்டு தகராறு…ஓனரை தாக்கி செல்போன் பறித்த பிரபல ரவுடி: கூட்டாளியுடன் கைது செய்து சிறையில் அடைப்பு…!!

Author: Rajesh
2 May 2022, 4:25 pm

புதுச்சேரியில் மதுபோதையில் செல்போன் கடையில் சிகரெட் கேட்டு உரிமையாளரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்ற பிரபல ரவுடி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் வசித்து வருபவர் அர்சுனன் (20). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அர்ச்சுனன் கடையை அடைத்து கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் மது போதையில் கடைக்கு வந்துள்ளனர்.

செல்போன் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது அர்சுனன் இது செல்போன் பழுது பார்க்கும் கடை இங்கு சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து அர்ச்சுனன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பறித்து செல்லப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ட்ராக் செய்து இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி கட்ட கார்த்திக் என்கிற கார்த்திகேயன் மற்றும் அவனது கூட்டாளி அரவிந்த் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. குடிபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கட்ட கார்த்திக் மீது புதுச்சேரியில் கொலை, அடிதடி உள்ளிட்ட 5க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 23 years old Actress Join with Dhanush இளம் நடிகையை போடுங்க.. கறார் காட்டிய தனுஷ் : இணையும் புது ஜோடி..!