பேரறிவாளன் விடுதலை…! எதிரும் புதிருமாக காங். தலைவர்கள்…! குழப்பத்தில் காங்கிரஸ் தலைமை…?

Author: Babu Lakshmanan
18 May 2022, 6:13 pm
Quick Share

31 ஆண்டு சிறைதண்டனை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய 2014-ம் ஆண்டு தமிழக அமைச்சரவை தீர்மானித்தது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, இது சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேர் விடுதலையில் நாங்களே இறுதி முடிவெடுப்போம் என்று கூறியது.

Perarivalan - Updatenews360

இதனால் முன் கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் 2016ல் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த 11-ந் தேதி இந்த வழக்கில் வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.மேலும், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தியும் வைத்தது.

வாதம்

இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பிலும் பேரறிவாளன் தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் கடந்த 13-ந் தேதி தாக்கல் செய்யப்படன.

மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த வாதத்தில், “ஏற்கனவே தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது. மேலும், தற்போது இவரை விடுதலை செய்வது தொடர்பான மனு குடியரசுத் தலைவர் முன்பு பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 9-ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு வேறு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இந்த வழக்கின் குற்றத்தின் தீவிரத் தன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எதையும் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவேதான், ஆளுநர், குடியரசு தலைவரின் முடிவுக்காக அனுப்பிவைத்து இருக்கிறார்.

இது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ன் கீழ் தண்டனை பெற்றாலும் கூட வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ ஆகும். அப்படி இருக்கும்போது, இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. தற்போது இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. எனவே, பேரறிவாளன் விடுதலை செய்யக் கோரியுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

அதேபோல், பேரறிவாளன் தரப்பில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த வாதத்தில் “தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது குடியரசு தலைவர் முடிவெடுக்க ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு முரணானது. மேலும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர். அவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக அவர் முடிவெடுக்கவோ, செயல்படவோ முடியாது.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ன் கீழ் தண்டனை பெற்றவர்களின் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டால், இத்தனை ஆண்டுகளாக ஆளுநர் சட்டப்பிரிவு 161-ன் கீழ் அளித்த மன்னிப்பு, தண்டனை குறைப்பு ஆகியவை அரசியல் சாசனத்துக்கு முரணானதாக அமைந்துவிடும்.

எனவே, சுப்ரீம் கோர்ட் தனக்கான தனிப்பட்ட அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி முன்னர் பல வழக்குகளில் முடிவெடுத்ததுபோல, பேரறிவாளன் வழக்கிலும் முடுவெடுத்து அவரை விடுதலை செய்யவேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

விடுதலை

நாடே பரபரப்புடன் எதிர்பார்த்த இந்த வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

“மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது.
ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே அரசியல் சாசனத்தில் தனக்குள்ள விசேஷ அதிகாரமான 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் இந்த முடிவை எடுத்துள்ளது” என்று 3 நீதிபதிகள் அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Image

இதனால் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் விடுதலை ஆகிறார்.

தவறான முன்னுதாரணம்

இந்தத் தீர்ப்பு குறித்து டெல்லி சட்ட வல்லுநர்களில் சிலர் அதிருப்தியும் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறும்போது, “அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி நீதிபதிகள் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளனர். சட்டப்படி இது சரியானதுதான்.

ஆனால் இதை நாங்கள் வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறோம். இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சதித்திட்டம் தீட்டி நமது மண்ணில் இந்த கொடூர செயலை நிறைவேற்றியுள்ளனர்.
இதை சிபிஐயும் தீவிரமாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Perarivalan - updatenews360

சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தை முழுமையாக கவனத்தில் கொண்டதா? என்பது தெரியவில்லை. மேலும் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 கைதிகளையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதாவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக அமைதிருக்கிறது எனக் கருதுகிறோம்” என்கிறார்கள்.

காங்., மோதல்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் இது தொடர்பாக தனது மனக் குமுறலை வெளிப் படுத்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைக் கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்ச நீதிமன்றம்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் தான் சில சட்ட நுணுக்கங்களை கூறி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Nellai KS Alagiri Byte - updatenews360

ஆனால் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சிலர், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். “பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று திருநாவுக்கரசர் எம்பி கூறியிருக்கிறார்.

ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,
முன்னாள் செய்தி தொடர்பாளருமான அமெரிக்கை நாராயணன், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஒரு நாளிதழ் வெளியிட்ட பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து, அதற்கு பதில் அளிப்பது போல் “சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த #பணநாயகத்துக்கு, பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி” என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனால் சுப்ரீம் கோர்ட், பேரறிவாளனை விடுதலை செய்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் எதிரும் புதிருமான நிலையை உருவாக்கி விட்டிருப்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

“ஏனென்றால் ராஜீவ் படுகொலை சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியதை அவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால்தான் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூட, ராஜீவ் கொலையாளிகளை ஹீரோக்களாக ஆக்காதீர்கள் என்று வேண்டுகோளும் விடுத்திருந்தார். இன்னும் சில தலைவர்கள் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், இதுபற்றி வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க தயங்குகின்றனர். ஏனென்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இது காங்கிரசுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் கருதுவதுதான் இதற்கு காரணம்” என டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 615

0

0