மேயர்… வந்தார்.. நின்றார்… சென்றார்… புஷ்ஷாகி போன மக்கள் குறைதீர் கூட்டம்.. மனு அளிக்க வந்தவர்கள் வேதனை!!

Author: Babu Lakshmanan
24 May 2022, 5:06 pm

மதுரை : மதுரை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த மேயர் இந்திராணி, வந்த வேகத்தில் உடனே திரும்பிச் சென்றதால், மனு கொடுக்க காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், ஆகியோர் தலைமையில் மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பாதாளசாக்கடை, சாலை வசதி, குடிநீர் தொடர்பான தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மனுக்களை வழங்கினார்.

காலை 10 மணிக்கு ஆரம்பமான முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்க குவிந்தனர். முகாமுக்கு வருகை தந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சிறிது நேரத்திலேயே கிளம்பி விட்டார். அவர் கிளம்பியதால் மனு கொடுப்பதற்காக நீண்ட நெடுவரிசையில் காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

அவர் சென்ற பிறகு அங்கே இருந்த திமுக தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா மற்றும் மண்டல துணை ஆணையர் ஆகியோர் பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினர்.

குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த மனோகரன் கூறியதாவது, எங்களது வார்டு சிறிய வார்டு தான். இருந்தாலும் கவுன்சிலர்கள் வார்டு முழுவதும் சுற்றி வருவதில்லை. என் வீட்டிற்கு எதிரே குப்பை கொட்டப்படுகிறது. குப்பை அள்ளுவதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை என பல நாட்கள் குப்பை அள்ளாமல் மலைபோல் குவிந்து குப்பை கிடங்காகவே கிடக்கிறது.

இதனால், இந்த பகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அதிகளவில் உள்ளன. இதுகுறித்து வாட்ஸ் அப்பில் புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு தெரிவித்தால், அதிகாரிகள் மிரட்டும் தோணியில் பேசுகின்றனர். மேயர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தாலாவது பலன் கிடைக்கும் என நம்பி மனு கொடுக்க வந்தால், மேயர் வந்த சில நிமிடங்களிலேயே சென்றுவிட்டார். அவர்களுக்கு மக்கள் குறை தீர்க்கும் பிரச்சனையை விட, வேறு ஏதோ வேலை இருக்கிறது போல, என வேதனை தெரிவித்த அவர் வேறு வழி இல்லாமல் வரிசையில் இருக்கிறோம் என்றார்.

மகால் பகுதியைச் சேர்ந்த சாந்தாராம் கூறுகையில், “கடந்த ஒரு ஆண்டுகளாகவே எங்கள் பகுதியில் குடிநீர் வருவதில்லை. இரவு நேரங்களில் விடிய விடிய கண்விழித்து குழாயில் தண்ணீர் அடிப்பதால், மறுநாள் வேலைக்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதிலும் வரக்கூடிய தண்ணீர் சாக்கடை கலந்த நீராகவே வருகிறது.

இது குறித்து பலமுறை புகார் தெரிவிக்கும் இதுவரை எந்த பயனும் இல்லை. கவுன்சிலரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்தும், பலன் இல்லாததால் இன்று மேயரிடம் புகார் தெரிவிக்க வந்துள்ளேன். இரண்டு மணி நேரமாக நின்றும், மேயரை சந்திக்க முடியவில்லை. என்றார்.

இதுகுறித்து மண்டல தலைவர் முகேஷ் சர்மாவிடம் கேட்டபோது, மேற்கு மண்டலத்தில் மேயர் ஆய்வு செய்ய சென்று விட்டார் என்றார். முகாமில் 200 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • sai abhyankkar introducing in malayalam cinema through balti movie Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?