அக்னி பாதை திட்ட விவகாரம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அமித்ஷா… போராட்டம் தணியும் என எதிர்பார்ப்பு

Author: Babu Lakshmanan
18 June 2022, 10:02 am

அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு துறையில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 17.5 முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர தகுதியுடையவர்களாவார்.

இந்தத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில், ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குவித்து வருகின்றனர். பல இடங்களில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தியதுடன், ரயில்களுக்கும் தீவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அக்னி பாதை வீரர்களின் 4 ஆண்டு கால பணி முடிந்த பின்னர் அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படும் என்றும், வங்கிக்கடன் மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் ஆகியவற்றுடன், மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்தும் போராட்டம் ஓயாத நிலையில், மற்றுமொரு அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், அக்னிவீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • I will campaign for Vijay… Famous actress makes a bold announcement! விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!