‘நம்ம செஸ்.. நம்ம பெருமை’…. தனியார் கல்வி நிறுவன பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 12:02 pm

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளதை ஒட்டி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், செஸ் ஒலிம்பியாட் ஸ்டிக்கரை பேருந்தின் முன்புறம் ஒட்டினார்.

அப்பேருந்துகளில் ஒருபுறம் தமிழில் “நம்ம சென்னை, நம்ம செஸ் என்றும், “நம்ம செஸ் நம்ம பெருமை” என்ற வாசகமும், மாமல்லபுர கோவிலும் மற்றொரு பக்கம் ஆங்கிலத்தில் “NAMMA CHESS NAMMA PRIDE” என்ற வாசகமும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும், இரு பக்கங்களிலும் முதல்வரின் புகைப்படம் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோவும் அச்சிடப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் இது போன்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் என்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • I will campaign for Vijay… Famous actress makes a bold announcement! விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!