இவங்களே ரூல்ஸ் போடுவாங்க.. இவங்களே மீறுவாங்க : மாநகராட்சி விதியை மீறும் ஆளுங்கட்சியினர்… தடையை மீறி ஒட்டப்படும் போஸ்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 3:44 pm

கோவை மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவை மீறி கோவையில் பொது இடங்களில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன . தடையை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை பாயுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோவை மாநகரில் அவினாசி ரோடு , உக்கடம்- ஆத் துப்பாலம் , மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன . இந்த மேம்பால தூண்களில் அரசியல் கட்சியினர் , தன்னார்வ அமைப்பினர் , வர்த்தக நிறுவனங்கள் சார்பில் தொடர்ந்து தினந்தோறும் வண்ண வண்ண கலரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன .

இதேபோல் மாநகராட்சி கட்டிடங்கள் , அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களிலும் விதிமுறைகளை மீறி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் கட்டிடங்களின் அழகு பாதிக்கப்படுவதுடன், சாலையில் செல்லும் வாகன ஒட்டிகளின் கவனமும் சிதறுகிறது.

இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் பொது இடங்கள், அரசு அலுவலக கட்டிடம், மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி, போஸ்டர் கலாச்சாரம் எழுந்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் குறிப்பாக அவினாசி சாலை மேம்பாலம், திருச்சி சாலை உள்ளிட்ட மேம்பாலங்களில் தொடர்ந்து மீறப்படுகிறது.

இதனைத் தடுக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையினரும் திணறி வரும் நிலையில், பாலத்தின் மற்ற தூண்களிலும் பொது இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது .

எனவே மாநகராட்சி அதிகாரிகள் வெறும் எச்சரிக்கை மட்டும் விடாமல் , செயலில் இறங்க வேண்டும் . தடையை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்போது தான் போஸ்டர் கலாசாரத்தை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் திமுகவினரே அரசு உத்தரவை மீறி போஸ்டர் ஒட்டியிருப்பதுதான். இது அரசின் அலட்சியமா அல்லது ஆளும்கட்சியினர்தானே என மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

  • People from Tamil Nadu should not be allowed in Tirupati: Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!