பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை.. ஒரே முடிவில் தமிழக அரசு ; பேச்சுவார்த்தையை நிறுத்தி போராட்டத்தை தொடரும் செவிலியர்கள்!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 9:31 pm

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போராட்டம் தொடரும் என்று ஒப்பந்த செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த தற்காலிக செவிலியர்கள் செவிலியர்கள் பணிநீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களுக்கு, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், இடதுசாரிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஒப்பந்த செவிலியர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணி நீட்டிப்பு செய்வது தொடர்பாக பேசப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா சமயத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் அவர்களுக்கு மாற்று பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு அரசுப்பணி பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை தமிழக அரசு வழங்குகிறது. மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்படும். ரூ.14,000 ஊதியம் பெற்று வந்த நிலையில், புதிய பணியில் ரூ.18,000 வரையில் வழங்கப்படும்.. மாவட்ட சுகாதார மையம் உள்ளிட்ட இடங்களில் பணி வழங்கப்படும்,” என தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணி நீட்டிக்கும் முடிவை ஒப்பந்த செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!