இது ஒன்றும் கட்சி நிகழ்வல்ல… திராவிட மாடலை ஆளுநர் தவிர்த்தது சரியே : திமுகவால் ஜீரணிக்க முடியல : அண்ணாமலை அட்டாக்!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 4:22 pm
Quick Share

சென்னை : பெட்ரோல் குண்டுவீச்சு, தற்கொலைப்படை தாக்குதல் என அடுத்தடுத்து அசம்பாவீதம் நடக்கும் தமிழகத்தை அமைதிப்பூங்கா என எப்படி கூற முடியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. திமுக கூட்டணி கட்சியினரின் கடும் அமளிகளுக்கு மத்தியில், இருப்பினும், ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து உரையாற்றினார். அப்போது, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்துள்ளார்.

இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகளுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விளிம்புநிலை கூறுகளாக செயல்பட்டன. அற்ப அரசியல் லாபங்களுக்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையை இடையூறு செய்ததன் மூலம் சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே, திமுக கூட்டணிக் கட்சிகள் போராடத் தயாராகிவிட்டனர்.

Annamalai Vs Stalin - Updatenews360

மக்களின் எதிர்ப்பை திசைதிருப்ப உணர்வு ரீதியான பிரச்சினையை கிளப்புவது திமுகவின் வாடிக்கை. ஆளுநரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா..? அதேபோல், கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு திமுக மவுன நாடகம் நடத்துகிறது. கண்ணியத்திற்கு மாறாக முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொண்டதால் ஆளுநர் அவையைவிட்டு வெளியேற நேரிட்டது. மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் அவையில் நடப்பதெல்லாம் நாடகம்.

தமிழ்நாட்டின் சூழல் உண்மைக்குப் புறம்பாக இருக்கும்போது, அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. திராவிட மாடல் என்ற வார்த்தைகள் ஆளுநர் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு, சட்டசபை ஒன்றும் கட்சி நிகழ்ச்சி அல்ல என்பதை திமுக நினைவில் கொள்ள வேண்டும்.

பெட்ரோல் குண்டு சம்பவங்கள், தற்கொலை படை தாக்குதல் நடைபெற்ற தமிழ்நாட்டை அமைதி பூங்கா என்று ஆளுநர் குறிப்பிடுவார் என்று எதிர்பார்ப்பது நகைச்சுவையாக இருக்கிறது. அதேபோல் சட்டசபை சபாநாயகர் நடுநிலையை கடைபிடிக்கவில்லை. தனது அரசியல் சாசன பொறுப்பை ஆளுநர் நிறைவேற்றுவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை, என பதிவிட்டுள்ளார்.

Views: - 417

0

0