திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழா எப்போது தெரியுமா..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Author: Babu Lakshmanan
16 January 2023, 10:54 am

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இந்தாண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா தொடர்பான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ளது உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில். சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் இந்தக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

பஞ்சாங்கம் முறைப்படி வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு தவறான தகவல்களை பரப்பப்பட்டது. இதனார், பக்தர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி விழா தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள் அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும், என தெரிவித்தனர்.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா தொடர்பான பக்தர்களின் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!