களைகட்டும் பழனி கோவில் கும்பாபிஷேகத் திருவிழா… முதல் கால யாக பூஜைகள் தொடக்கம்… 27ம் தேதி வரை மூலவர் தரிசனம் ரத்து

Author: Babu Lakshmanan
24 January 2023, 8:39 am

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பிரதானமாக விளங்குகிறது. மூன்றாம் படை வீடான பழனியில், மலைக்கோவிலில் உள்ள பழனியாண்டவரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் முதன்மை கோவிலாக விளங்கும் பழனியில் போகர் சித்தரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்துசாத்தும் பணி நேற்று நடைபெற்றது. வருகிற 27ம்தேதி கும்பாபிஷேகம் முடியும் வரை மூலவரை தரிசிக்க முடியாது. எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் முதல்கால யாகபூஜை நேற்று மாலை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் துவங்கியது‌‌.

மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு, தெய்வ விக்ரகங்களின் சக்தியை, புனிதநீர் அடங்கிய புனித கலசங்களில் உருஏற்றி யாகசாலைகளில் வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வேதமந்திரங்களும், தமிழ்மறைகளும் ஓத யாகங்கள் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து வரும் 27ம்தேதி அதிகாலை வரை எட்டு கால வேள்வி பூஜைகள் துவங்கி நிறைவுறுகிறது. 26ம்தேதி மலைக்கோவில் மூலவர் ராஜகோபுரம் தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு 26ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து 27ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிசேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. கும்பாபிஷேகத்தன்று காலை 9:30 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?