உதயநிதிக்கு போட்டியாக செங்கல்லை தூக்கிய அண்ணாமலை… சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா..? என கிண்டல்..!!

Author: Babu Lakshmanan
21 February 2023, 9:40 am

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கலை பார்சல் அனுப்பப் போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணி வேட்பாளரான EVKS இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த்தும் நேற்று ஒரே நாளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி களைகட்டியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த நாடளுமன்ற, சட்டமன்ற தேர்தலைப் போல, இந்த முறையில், மதுரை எய்ம்ஸ் எங்கே..? எனக் கேள்வி எழுப்பி செங்கலை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அவருக்கு போட்டியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் செங்கல்லை கையில் எடுத்து திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியதாவது :- 30 திமுக அமைச்சர்களை எதிர்த்து தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள்.

சீப்பை ஒழித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுபோய்விடும் என்று பழமொழி சொல்வார்கள். ஆனால் வாக்காளர்கள் ஒழித்து வைப்பதால், அதிமுக – பாஜகவின் கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது. திமுக ஆட்சியமைத்த 22 மாதங்கள், தமிழ்நாட்டின் இருண்ட காலமாக மாறியுள்ளது. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 கொடுத்திருந்தால், தற்போது ரூ.22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதேபோல் கேஸ் சிலிண்டர் மானியம் இதுவரை அளிக்கப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் கட்ட கொடுக்கப்பட்ட செங்கலை உதயநிதி எடுத்துக்கொண்டு சுற்றுகிறார்.

நான் வைத்திருக்கும் செங்கல் அதுவல்ல. தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்ட இதுபோல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் கொடுத்துள்ளோம். 11 மருத்துவ கல்லூரியில் 1800 மருத்துவ சீட்டில் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிக்க காரணமாக இருப்பது நான் வைத்திருக்கும் செங்கல். இதனை அமைச்சர் உதயநிதிக்கு பார்சல் அனுப்ப போகிறேன். திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கட்சிகளை அடமானம் வைத்துவிட்டார்கள். மக்களிடம் வாக்கு கேட்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ, கனிமொழிக்கோ எந்த தகுதியும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?