தனி ஆளாக போராடிய ஸ்டோக்ஸ்… மைதானமே எழுந்து கரகோஷம் எழுப்பிய தருணம் ; தன்னம்பிக்கையை கைவிடாத இங்கிலாந்து கேப்டன்..!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 11:25 am

2 போட்டிகளில் தோல்வியடைந்தாலும், எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 28ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416 ரன்களும், இங்கிலாந்து 325 ரன்களும் எடுத்தது. 91 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (29 ரன்), பென் டக்கெட் (50 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டக்கெட் 83 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் 10 ரன்னில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். இதனால், கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ், தனது பேட்டால் பதிலடி கொடுத்தார்.

கிரீன் வீசிய ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து தனது 13வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து, அவர் அதிரடி காட்டியதால், ஆஸ்திரேலியாவின் அனைத்து பீல்டர்களும் பவுண்டரி எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். ஸ்டோக்சின் அதிரடியால் இங்கிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 155 ரன்னில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் வீழ்ந்ததும் இங்கிலாந்தின் நம்பிக்கையும் தகர்ந்து போனது.

அடுத்து வந்த ஆலி ராபின்சன் (1 ரன்), ஸ்டூவர்ட் பிராட் (11ரன்), ஜோஷ் டங்கு (19 ரன்) வரிசையாக வெளியேறினர். முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81.3 ஓவர்களில் 327 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வருகிற 6ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.

தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறுகையில், ‘இதே போன்ற சூழலில் 2019-ம் ஆண்டு ஹெட்டிங்லேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் அணிக்கு வெற்றி தேடித்தந்தேன். துரதிர்ஷ்டவசமாக இங்கு அது மாதிரி நடக்கவில்லை. இப்போது நாங்கள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறோம். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் தலா 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றோம். அதே போல் இந்த தொடரில் எஞ்சிய 3 போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது,’ எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!