கருணாநிதியையே புலம்பவிட்ட மண்… ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதே ஒட்டுமொத்த திமுக அரசின் முயற்சி ; குமரியில் அண்ணாமலை பேச்சு…

Author: Babu Lakshmanan
3 July 2023, 10:18 am
Quick Share

ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதையே ஒட்டு மொத்த திமுக அரசும் செய்து வருவதாக குமரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களது 9 ஆண்டு கால சாதனை குறித்து, மாவட்டத் தலைவர் தர்மராஜா அவர்களது தலைமையில் நடைபெற்ற குமரி சங்கமம் பொதுக்கூட்டத்தில், குமரி கடல் அலை போல ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

குமரி மண், மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட அய்யா வைகுண்டர் அவதரித்த மண். விவேகானந்தர் ஞானம் பெற்ற மண். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், தளவாய் வேலுத்தம்பி உள்ளிட்ட சிறந்த மனிதர்கள் பிறந்த மண்.
கலைஞர் கருணாநிதி அவர்கள், பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடிக்க இந்து, கிறிஸ்தவர்கள் என்று பிரித்து அரசியல் செய்ய முயற்சித்தாலும், இறுதியில், பெருந்தலைவர் காமராஜரை இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமை உடைய மண். நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்று இறுதியில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் புலம்ப விட்ட மண்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் மீனவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் அவர்கள், மீனவர்கள் உயிர் உடமைகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்திருக்கிறார். விவசாயத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினைப் போல், மீனவர்களையும் மீன் விவசாயிகள் என்று பெருமைப்படுத்தியுள்ளார். ஆனால், திமுக மீனவர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தாமல், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதையே ஒட்டு மொத்த திமுக அரசும் செய்து வருகிறது. இத்தகைய ஊழல்வாதிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர, மண்ணையும் மக்களையும் பாதுகாக்க, உலக அரங்கில் நமது நாடு மேலும் மேலும் உயர, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும். தமிழகத்திலிருந்தும் பெரும்பான்மையான எம்பிக்கள் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அடுத்த ஒன்பது மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 223

0

0