ஆளுநருக்கு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் ; மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!
Author: Babu Lakshmanan3 July 2023, 9:34 am
ஆளுநர் ஆர்என் ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது :- தமிழக மக்களின் நலனுடன் ஆளுநர் ஆர்என் ரவி விளையாடுகிறார். ஆளுநர் தேவை இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிவாளம் போடாவிட்டால், தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாக நேரிடும். ஆளுநர் பதவி தேவையற்றது.
தமிழகம் வளர்ச்சியடைவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் விமர்சனம் செய்து வருகிறார். தமிழகத்தில் முதலீடு செய்யவிடாமல் தடுக்கவே, வெளிநாடு செல்வதால் முதலீடு வராது என கூறுகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, பாஜகவைபோல் அவர் செயல்படுவதையே காட்டுகிறது
அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல, பாஜக மாற்றியுள்ளதால், தனது முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை.
எதிர்க்கட்சிகளை குறிவைத்து மட்டுமே விசாரணை அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; பாஜகவினர் மீதும் வழக்குகள் உள்ளன. அமலாக்கத்துறையின் இதுபோன்ற நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக எப்போதும் மாற்றிக் கொள்ளாது.
தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதால், இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.