ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்… பழுதான அபாய சங்கிலி ; நொடியில் நடந்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 12:09 pm
Quick Share

7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி – சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த கஸ்தூரி (22) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது, கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மேலும் படிக்க: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இறுகும் பிடி… சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு!!

இந்த சூழலில், சங்கரன்கோவிலில் கணவரின் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காகவும், 5ம் தேதி தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஸ்தூரி குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது,எஸ் 9 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்துள்ளது. இதனால், உறவினர்களின் உதவியுடன் பெட்டியின் நுழைவு வாயிலில் உள்ள கை கழுவும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கஸ்தூரி ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

இதனால், அதிர்ந்து போன உறவினர்கள் எஸ்9 பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுந்துள்ளனர். ஆனால், அது பழுதடைந்ததால் ரயில் நிற்கவில்லை. இதனால், எஸ் 8 பெட்டிக்கு ஓடிச் சென்று அங்கிருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்று கஸ்தூரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே, கஸ்தூரியின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் அவரது இறப்பு குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு (கோட்டாட்சியர்) விருத்தாசலம் ரயில்வே போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. கண்ணன் விசாரணை நடத்த உள்ளார்.

Views: - 219

0

0