வெறிச்சோடிய பெங்களூரு : தமிழக கர்நாடக எல்லையில் பஸ், லாரிகள் நிறுத்தம்.. மக்கள் பாதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 8:37 am

வெறிச்சோடிய பெங்களூரு : தமிழக கர்நாடக எல்லையில் பஸ், லாரிகள் நிறுத்தம்.. மக்கள் பாதிப்பு!!

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது.

தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளன. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் 26-ந் தேதி (அதாவது இன்று) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.

அதன்படி பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடக்கிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

முழு அடைப்பையொட்டி பஸ், ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படுகிறது.

அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகள் மூடப்படுகிறது. இந்த முழுஅடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் லாரிகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு நோக்கி கர்நாடகா வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

அதோடு தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி பெங்களூர் வழியாக மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் கொண்டு செல்லும் சரக்கு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் பயணிக்கும் மக்கள் மற்றும் சரக்குகளை எதிர்பார்க்கும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?