ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் பாகிஸ்தான் வீரர்களை கேவலப்படுத்தவில்லை.. அண்ணாமலை கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 3:25 pm

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் பாகிஸ்தான் வீரர்களை கேவலப்படுத்தவில்லை.. அண்ணாமலை கருத்து!!

நேற்று குஜராத் அகமதாபாத் , நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

போட்டி நடைபெற்ற சமயத்தில், பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள (டிவிட்டர்) பக்கத்தில் பதிவிட்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்த இப்படிப்பட்ட செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், ஒரு விளையாட்டானது இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாக விளையாட்டு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் பதிவிட்டு இருந்தார் .

அமைச்சர் உதயநிதி குறித்த இந்த கருத்து குறித்தும், நேற்று போட்டியில் நடந்த ஜெய் ஸ்ரீ ராம் சம்பவம் குறித்தும் இன்று கோவை விமான நிலையத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், விளையாட்டை விளையாட்டாய் பார்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறுகிறார் என்றால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். பிறகு ஏன் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என அவர் கூறி வருகிறார் என கேள்வி எழுப்பினர்.

பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்த போது நல்ல மரியாதை கொடுத்துள்ளோம். சென்னை வந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற போது எழுந்து நின்று மரியாதை செலுத்தி உள்ளோம்.

கடைசியாக ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணியினர் விளையாடிய 2 போட்டிகளிலும் ரசிகர்கள் சிறப்பான வரவேற்ப்பை அளித்துள்ளனர்.

நேற்று அகமதாபாத்தில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதை, பாகிஸ்தான் வீரர்களை கேவலப்படுத்துவதாக நான் பார்க்கவில்லை.

அது அவர்கள் கோஷம் போடுகிறார்கள் அவ்வளவுதான் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். விளையாட்டை மிக ஆழமாக எடுத்து கொள்ள கூடாது. அமைச்சர் உதயநிதிக்கு இதனை விமர்சிக்க அருகதை இல்லை என கடுமையாக தனது விமர்சனத்தையும், ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் குறித்த விளக்கத்தையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!