முகமது ஜூபேருக்கு மத நல்லிணக்க விருது… தமிழக அரசின் செயலுக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு…!!

Author: Babu Lakshmanan
26 January 2024, 12:33 pm

கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 75வது குடியரசு தினம் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, முப்படையினர், காவல்துறையினர், மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரவி ஏற்றுக் கொண்டார். பின்னர், பல்வேறு குழுக்களின் நாட்டியம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகார்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். அப்போது, 2024ம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கப்பட்டது.

ஆல்ட் நியூஸ் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உண்மை செய்திகளை மட்டும் இணையதளத்தில் வெளியிட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2023ம் ஆண்டு தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில், அது வடமாநிலத்தில் நடந்தது என்ற உண்மையை கண்டறிந்து வதந்தி என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தி.மு.க., அரசு, ஒவ்வொரு வாரமும், புதிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2024ம் ஆண்டுக்கான மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டிருப்பதன் மூலம், கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதித்து விட்டது. சமூக முரண்பாட்டை உருவாக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மதநல்லிணக்க விருதுக்கான நபரை திமுக தேர்வு செய்ததில் நம்மை எந்த ஆச்சரியமும் படுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் தற்கொலை படை தாக்குதலையே சிலிண்டர் குண்டுவெடிப்பு என்றுதான் கூறி வருகிறார்கள். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி திமுக அரசுக்கு கவலை கிடையாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!