மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்-அண்ணாமலை மீது பாய்ந்த திடீர் வழக்கு!
Author: Prasad2 July 2025, 11:44 am
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு, இந்து முன்னணியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் அண்ணாமலை முருகன் குறித்து மட்டுமல்லாது அரசியல் குறித்து பல விஷயங்களையும் பேசினார். மேலும் இந்த மாநாட்டில் தமிழக கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் அரசியல், மதம் ஆகியவற்றை குறித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போல் பேசக்கூடாது என மாநகர காவல் துறை நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் அதையும் மீறி முருகன் மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை உட்பட பலரும் பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது.
இந்த நிலையில் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சையாக பேசியது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மத ரீதியாக பகைமையை உண்டாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் மாநகர காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.