உதயநிதி இருக்காருல… விரைவில் இந்த நிலைமை வரும்… அதுக்காக காத்திருக்கிறோம்… திமுகவுக்கு எச்சரிக்கை மணி அடித்த சி.வி. சண்முகம்…!!

Author: Babu Lakshmanan
24 June 2022, 1:20 pm
Quick Share

அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலளித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிரெதிராக செயல்பட்டது. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று இபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

மேலும், அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு, அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் அங்கிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், நேற்று இரவே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பா வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறிதது விமர்சனம் செய்துள்ளார். ரொம்ப சந்தோஷப் பட வேண்டாம். அடிப்படை தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கத்திற்கு, சாதாராண தொண்டனாக இருந்து, தற்போது ஒன்றரை கோடி தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

ஆனால், திமுகவில் வாரிசு அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. தந்தை, மகன், பேரன் மற்றும் கொள்ளுபேரன் என வாரிசு அரசியல் நீண்டு கொண்டே செல்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்யும் போதுதான் திமுகவில் பிரச்சனை வெடிக்கும். அதைப் பார்க்கத்தான் போகிறோம். அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம், எனக் கூறினார்.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அடுத்த தலைமை யார் என்பதில்தான் தற்போது இபிஎஸ்-க்கும், ஓபிஎஸ்-க்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இதே நிலைமை, ஸ்டாலினுக்கு பிறகு திமுகவில் வரும் என்பதை அமைச்சர் சிவி சண்முகம் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Views: - 486

0

0