மனித குலத்தின் இயற்கைக்கு எதிரான போர் : பாலை வனம் ஆகும் அபாயம் ..!

6 December 2019, 3:37 pm
DEFORESTATION_UPDATENEWS360
Quick Share

மனித குலத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் வரமான பூமித் தாயை இயற்கை சார்ந்த பேரழிவின் மூலமான பாதிப்புகளிலிருந்து காக்க வேண்டும் என்கின்ற முனைப்பில் முதல் கட்டமாக, காடுகளின் அழிவை நிறுத்திவிட்டு, 1.5 டிரில்லியன் அளவிலான கூடுதல் மரங்களை நட்டு வளர்த்து, இயற்கை வளத்தை காப்பாற்ற மொத்த பூமிப்பரப்பிலும் இருக்கின்ற பாதுகாப்பான சூழலை உருவாக்க மனிதர்கள் முனைய வேண்டும் என்று, இயற்கை மற்றும் சுற்று சூழல் சார்ந்த களப்பணியாளர்கள் உலகெங்கிலும் பலவிதமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள்.

பருவநிலை மாற்றம் (Climate Change) தற்கால சூழலில், ஒரு மிகப்பெரும் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் பிரதேசங்களில் இருக்கின்ற பனிக்கட்டிகள் மிகவும் அசுர வேகத்தில், உருகி வருகின்றது. அதன் காரணமாக, உலகெங்கிலும், கடலின் நீர்மட்டமானது மிகவும் அதிகரித்து, உலகெங்கிலும் இருக்கின்ற கடற் கரையோரத்தின் நகரங்கள் அனைத்தும், எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கக்கூடிய அபாயங்கள் அதிகரித்துக் கொண்டேயிருப்பதாகவும், உலகெங்கிலும் இருக்கின்ற சூழலியல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் தினமும், அபாயச் சங்கு ஊதிக் கொண்டு இருக்கின்றார்கள்.விபரீதம் நெருங்கி வருவது தெரியாமல், மனிதன் இயற்கையை தனது ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கும், இயற்கை வளத்தை மிக அதிகமான அளவிற்கு, நுகர்ந்து கொண்டும் தனக்கான படு குழியை மனிதன் தானே தோண்டிக்கொண்டு இருக்கின்றான்.

ஆண்டு தோறும் பருவம் தப்பித்து, மாறுபட்டு பொழிகின்ற மழையானது சிலநேரங்களில், பொய்த்துப் போவதும், இன்னொரு பக்கம் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்குகள் ஏற்படுவதும், அன்றாட நடைமுறையாக இருக்கின்றது.

மனித குலம் இயற்கைக்கு எதிராகப் போர் தொடுப்பதன் மூலமாக, வாகனப் பெருக்கத்தையும், தொழிற்சாலைகளையும், குளிர்விப்பான்களையும் அதிகப்படுத்திய காரணத்தால், அதன் மூலமாக வெளியேற்றப்படுகின்ற கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு போன்ற கரியமில வாயுக்களின் அதிகப்படியான உமிழ்வு தான் சுற்று சூழல் சிக்கல்களுக்கு காரணமாகும்.
கடந்த காலங்களில் நமது முன்னோர்கள் வாழந்து நமக்கு விற்றது சென்ற பூமியை, மரங்கள் சூழ்ந்திருந்த கானகங்களாக நமக்காக நமது முன்னோர்கள் விட்டு சென்று இருக்கின்றனர். தற்போது, மனித குலத்தின் பேராசையின் காரணமாக, செழிப்பான பூமிப்பரப்பினை, கட்டாந்தரைகளாகவும், பாலை வனங்களாகவும் மாறிக் கொண்டே தான் இருக்கினறது என்பது மிகுந்த வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.