முடி உதிர்வுக்கு ஃபுல் ஸ்டாப்: முருங்கை கீரை ஹேர் பேக்!!!

Author: Hemalatha Ramkumar
27 June 2023, 12:55 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

தரையிலும், படுத்து உறங்கும் தலையணையிலும் அங்கும் இங்குமாக தலைமுடி சிதறி கிடந்தால் நிச்சயமாக மனம் வருந்த தான் செய்யும். ஆனால் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது? மேலும் தலைமுடி கொட்ட தான் செய்யும். எனவே இதற்கான தீர்வை நோக்கி பயணிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். தலை முடி உதிர்வுக்கு கடைகளில் என்னதான் காஸ்ட்லியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும், இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது நமது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக அதனால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. அந்த வகையில் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு முருங்கை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

முருங்கை இலை தலைமுடி உதிர்வை சரி செய்ய பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை இலையில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, மயிர்க்கால்களுக்கு வலு சேர்கிறது.

முருங்கைக் கீரையில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஏ ஊட்டச்சத்து செல் உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான மயிர் கால்களுக்கு வித்திடுகிறது. அதோடு இதில் காணப்படும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்கு அவசியமாக உள்ளது. கூடுதலாக முருங்கைக் கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் பன்மடங்கு உள்ளது. இது மயிர் கால்கள் சேதம் அடைவதை தவிர்க்க உதவுகிறது. இத்தகைய நன்மைகள் நிறைந்த முருங்கை கீரையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

முருங்கைக்கீரை ஹேர் மாஸ்க் தயாரிப்பதற்கு உங்கள் தலைமுடியின் அளவிற்கு ஏற்ப முருங்கை இலையை எடுத்து அதனை பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இதனோடு தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைமுடி மற்றும் மயிர் கால்களில் படும்படி நன்றாக தேய்க்கவும். 30 நிமிடங்கள் ஊறவைத்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும்.

தலைமுடி உதிர்வை சமாளிக்க முருங்கைக்கீரை ஹேர் ஆயில் தயார் செய்தும் நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு முருங்கை இலை பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க வைக்கவும். பின்னர் ஆற வைத்து அந்த எண்ணெயை தலைமுடி முழுவதும் நன்றாக தடவி இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை வழக்கம் போல ஷாம்பு போட்டு தலை முடியை அலசிக் கொள்ளலாம்.

அடுத்தபடியாக நான்கைந்து முருங்கை கொத்தை தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். தண்ணீரின் நிறம் மாறியவுடன் அடுப்பை அணைத்து விடலாம். இந்த தண்ணீர் ஆறியவுடன் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலைமுடி மற்றும் மயிர் கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து 15 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பின்னர் தண்ணீர் பயன்படுத்தி தலை முடியை அலசவும். இந்த மூன்று குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து வர நிச்சயமாக உங்கள் முடி உதிர்வு நிறுத்தப்பட்டு, முடி வளர்ச்சி அதிகரிப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 375

0

0