பிட்காய்ன் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகளுக்குத் தடை..! மத்திய அரசே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த முடிவு..!

30 January 2021, 7:37 pm
cryptocurrency_ban_India_UpdateNews360
Quick Share

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், பிட்காயின் போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்ஸிகளையும் தடை செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை வழங்குவதற்கான கட்டமைப்பையும் அரசாங்கம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1’ம் தேதி மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள 20 புதிய மசோதாக்களில் இதுவும் ஒன்றாகும்.

புதிய மசோதாவுக்கு “அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய மசோதாவின் கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை, 2021” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதோடு, தற்போதைய கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 25’ஆம் தேதி வெளியிடப்பட்ட, கட்டண முறைகள் குறித்த ரிசர்வ் வங்கியின் கையேடு, ரூபாயின் டிஜிட்டல் பதிப்பை வெளியிடுவதா என்பதை ஆராய்ந்து வருவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தனியார் டிஜிட்டல் நாணயங்கள் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளன” என்று மத்திய வங்கி கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவில், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் இந்த நாணயங்களைப் பற்றி சந்தேகம் கொண்டுள்ளன. மேலும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து அச்சத்தில் உள்ளன. ஆயினும்கூட, காகித நாணயத்தின் டிஜிட்டல் பதிப்பின் தேவை உள்ளதா என்பதையும், இருந்தால், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது.”என்று அது குறிப்பிட்டது.

ரிசர்வ் வங்கி 2018’இல் கிரிப்டோ பரிவர்த்தனைகளை திறம்பட தடைசெய்ததுடன், அந்த உத்தரவின் ஒரு பகுதியாக தனியார் கிரிப்டோகரன்ஸிகள் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் நிறுத்துமாறு வங்கிகள் போன்ற அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டது. இதன் மூலம் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

எனினும், 2020’ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி ரோஹிண்டன்.எஃப்.நாரிமன் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அந்த தடையை ரத்து செய்தது.

இதற்கிடையில், மிகவும் பிரபலமான கிரிப்டோ நாணயமான பிட்காயினின் விலை, 38,000 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அவற்றில் முதலீடு செய்ய பெரும்பாலோனோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Views: - 0

0

0