இந்தியாவில் முதல் முறையாக Facebook இன் கடன் வழங்கும் சேவை | கடன் வரம்பு என்ன? வட்டி விகிதம் எவ்வளவு? விவரங்கள் இங்கே | Facebook Loan
Author: Hemalatha Ramkumar23 August 2021, 10:43 am
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இந்தியாவில் வணிகங்களுக்கு கடன் வழங்குவதற்கான புதிய முயற்சிகளை துவங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் முதல் முறையாக இந்தியாவில் தான் இந்த முயற்சியைத் துவங்கியுள்ளது.
இதற்காக பேஸ்புக் நிறுவனம் இண்டிஃபை (Indifi) உடன் கூட்டணி அமைத்துள்ளது. பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு கூட்டணி நிறுவனமான இண்டிஃபை கடன் வழங்கும் என்று கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடக நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த புதிய திட்டத்தின்படி, 500,000 ரூபாய் ($ 6,720) முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் 17%-20% விகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நிதி, உணவு விநியோகம் மற்றும் கல்வி என அனைத்திலுமே சேவைகளை வழங்கும் இந்தியா தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு வளமான இடமாக மாறி வரும் நிலையில் சிறு வணிகங்களுக்கு உதவும் நோக்கில் வெளியாகியுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இந்த புதிய கடன் வழங்கும் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிதி பிரிவில் பேஸ்புக் மட்டும்மல்லாது உலகின் முன்னணி ஆன்லைன் வணிக தலமான அமேசான் கடந்த வாரம் இந்தியாவின் செல்வ மேலாண்மைத் துறையில் முதல் முறையாக முதலீடு செய்தது.
இதுமட்டுமல்லாமல், பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் தலத்தின் வாயிலாக டிஜிட்டல் கட்டண சேவைகளை வழங்குவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
0
0