போலி பில்கள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு..! நாடு முழுவதும் 1,180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பாய்ந்தது..!

15 November 2020, 7:23 pm
india_rupee_bank_updatenews360
Quick Share

பழைய பொருட்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள், ஆயத்த ஆடைகள், தங்கம், வெள்ளி மற்றும் கட்டுமான சேவைகள் போன்ற பொருட்களுக்கு போலி பில்களை வழங்கியதற்காக கடந்த வாரம் 25 பேரை ஜிஎஸ்டி விசாரணைக் குழுவான டிஜிஜிஐ கைது செய்துள்ளது.

1,180 நிறுவனங்களுக்கு எதிராக போலி பில்களைவழங்குவதற்காக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் (டிஜிஜிஐ) சுமார் 350 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

“போலி பில்கள் மற்றும் இல்லாத நிறுவனங்கள் மூலம் மோசடி முறையில் உள்ளீட்டு வரிக் கடனை (ஐடிசி) பெறுவதற்கும் அனுப்புவதற்கும் எதிரான நடவடிக்கை, நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் 1180 நிறுவனங்களுக்கு எதிராக போலி பில்கள் வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட 350 வழக்குகளில் இரண்டு முக்கிய நபர்கள் மற்றும் இரண்டு தொழில் வல்லுநர்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என்று டிஜிஜிஐ ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

போலி பில்கள், இல்லாத நிறுவனங்கள் மற்றும் வட்ட வர்த்தகம் மூலம் மோசடி முறையில் உள்ளீட்டு வரிக் கடனை (ஐ.டி.சி) பெறுவதற்கும் அனுப்புவதற்கும் எதிரான மிகப்பெரிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். எனினும், மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்களையும், ஜி.எஸ்.டி, வருமான வரி, மற்றும் பணமோசடி செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக போலி பில்களைப் பயன்படுத்திய பயனாளிகளையும் கண்டறிந்து கைது செய்ய தேடல்கள் மற்றும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

டெல்லி, பெங்களூரு, மும்பை, லூதியானா, சென்னை, நாக்பூர், கொல்கத்தா, குருகிராம், ஜிந்த், பல்லப்கர், அகமதாபாத், சூரத், வதோதரா, பிலாய், ஜோத்பூர், ஹைதராபாத், மதுரா, விசாகூர், ராய்பூர், இம்பால், மீரட், குவஹாத்தி, புனே, சிலிகுரி, போபால் மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் இந்த தேடல் நடந்து வருகின்றன.

இரும்பு மற்றும் எஃகு, செம்பு கம்பி, இரும்பு அல்லாத உலோகங்கள், பிளாஸ்டிக் துகள்கள், பி.வி.சி பிசின், ஆயத்த ஆடைகள், தங்கம் மற்றும் வெள்ளி, கட்டுமான சேவைகள், பணி ஒப்பந்த சேவைகள், வேளாண் தயாரிப்புகள், பால் தயாரிப்பு, மொபைல், மனிதவள விநியோக சேவைகள், விளம்பரம் மற்றும் அனிமேஷன் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, மும்பை மண்டலத்தின் டி.ஜி.ஜி.ஐ, தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் சர்க்கரை ஆலை அதிபர் ரத்னகர் குட்டே மற்றும் சுனில் ஹைடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் குட்டே மற்றும் அவரது வணிக கூட்டாளியான விஜேந்திர ரங்கா ஆகியோருடன் சேர்ந்து வேறு ஒரு முக்கிய நபர்களையும் 520 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி பில் மோசடிக்காக கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பெரிய வழக்கில், டெல்லி சிஜிஎஸ்டி மண்டலம், கிருஷ்ணா டிரேடிங் கோ நிறுவனத்திற்கு எதிராக ஜிஎஸ்டி மோசடி வழக்கை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஐடிசிக்கு அனுப்பும் பொருட்களை வழங்காமல் பில்களை மட்டும் வழங்கியதாக கண்டறியப்பட்டது.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் ஐடிசி மோசடி செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் சில நாட்களில் தீவிரமடையும் என்றும் மேலும் பல கைதுகள் செய்யப்படும் என்றும் டிஜிஜிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. பணமோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது அமலாக்க இயக்குநரகம் விசாரணை மேற்கொள்ளும் என்று ஒரு உயர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

போலி பில்கள் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்லாமல், நேர்மையற்ற உரிமையாளர்களால் நிறுவனங்களிடமிருந்து பணத்தை பறிப்பதற்கும், ஹவாலா மற்றும் போலி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மூலம் வெளிநாடுகளுக்கு பணத்தை மாற்றுவதற்கும் பணவீக்க செலவினங்களை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

“வங்கிகளிடமிருந்து அதிக கடன்களைப் பெறுவதற்கும், கடன் பணத்தை தவறான வழியில் மாற்றுவதற்கும், பின்னர் அது என்.பி.ஏ’ஆக மாறுவதற்கும், பின்னர் ஐ.பி.சி செயல்முறைக்கு என்.சி.எல்.டிக்கு நகர்த்துவதற்கும், அதன் மூலம் வங்கிகள் மற்றும் பிற நிதிக் கடனாளர்களை மோசடி செய்வதற்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன. ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் எம்இஐஎஸ்’இன் ஊக்கத்தொகைகள் ஜனவரி 2021 முதல் ஆர்ஓடிடிஇபி மூலம் நிறுத்தவும் மாற்றவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் முறைகேடுகள் கணிசமான அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஜிஎஸ்டி சட்டங்கள், வருமான வரி சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தவிர, கோஃபோசாவின் கீழ் கைது செய்ய முடியுமா என்று ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் புதிய ஜிஎஸ்டி பதிவு செய்வதற்கான நடைமுறைகளும் இறுக்கப்படுகின்றன.

நவம்பர் 9’ஆம் தேதி தொடங்கிய நாடு தழுவிய நடவடிக்கை, வருவாய்த் துறையின் உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு தீவிரப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 41

0

0

1 thought on “போலி பில்கள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு..! நாடு முழுவதும் 1,180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பாய்ந்தது..!

Comments are closed.