சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கிய இந்தியர்கள்..! இரண்டாவது பட்டியலைப் பெற்றது மத்திய அரசு..!

10 October 2020, 9:13 am
swiss_bank_updatenews360
Quick Share

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கறுப்புப் பணத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சுவிட்சர்லாந்துடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது நாட்டினர் மற்றும் நிறுவனங்களின் இரண்டாவது செட் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு தானியங்கி முறையிலான தகவல் பரிமாற்றத்தின் கீழ் உலகளாவிய தரங்களின் கட்டமைப்பிற்குள் சுவிட்சர்லாந்தின் மத்திய வரி நிர்வாகம் நிதிக் கணக்குகள் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொண்ட 86 நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

முதல்முறையாக இந்தியா 75 நாடுகளில் ஒன்றாக, 2019 செப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் இருந்து தானியங்கி தகவல் பரிமாற்றத்தின் கீழ் முதல் முறையாக விவரங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தகவல் பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 31 லட்சம் நிதிக் கணக்குகள் உள்ளன என்று சுவிட்சர்லாந்து மத்திய வரி நிர்வாகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2019’இல் வழங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இதே அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கை 86 நாடுகளில் இந்தியாவை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், சுவிஸ் வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் நிதிக் கணக்குகள் பற்றிய விவரங்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொண்ட முக்கிய நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு 86 நாடுகளுடன் சுவிட்சர்லாந்தின் மூன்று மில்லியனுக்கும் அதிகமான நிதிக் கணக்குகள் பற்றிய தகவல் பரிமாற்றத்தில் இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தவிர, கடந்த ஒரு வருடத்தில் 100’க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை சுவிஸ் அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர், வரி ஏய்ப்பு உள்ளிட்ட நிதி தவறுகளில் விசாரணைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நிர்வாக உதவிக்கான கோரிக்கைகள் கிடைத்தன.

எனினும், பரிவர்த்தனை கட்டமைப்பை நிர்வகிக்கும் கடுமையான ரகசியத்தன்மை விதிமுறைகளை மேற்கோளிட்டு, இந்தியர்கள் வைத்திருக்கும் கணக்குகளில் சரியான கணக்குகள் அல்லது சொத்துக்களின் அளவு குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

சுவிஸ் அதிகாரிகள் பகிர்ந்துள்ள தகவல்களில் பெயர், முகவரி, வசிக்கும் நாடு மற்றும் வரி அடையாள எண் போன்ற அடையாளம், கணக்கு மற்றும் நிதித் தகவல்கள், அத்துடன் அறிக்கையிடும் நிதி நிறுவனம், கணக்கு இருப்பு மற்றும் மூலதன வருமானம் தொடர்பான தகவல்கள் அடங்கும்.

பரிமாற்றப்பட்ட தகவல்கள் வரி செலுத்துவோர் தங்கள் வரி அறிக்கையில் தங்கள் நிதிக் கணக்குகளை சரியாக அறிவித்திருக்கிறார்களா என்பதை சரிபார்க்க வரி அதிகாரிகளை அனுமதிக்கும். அடுத்த பரிமாற்றம் செப்டம்பர் 2021’இல் நடைபெறும்.