58 சதவீத இமாலய வளர்ச்சி..! புதிய உச்சம் தொட்ட இந்திய ஏற்றுமதி..! கொரோனாவுக்கு மத்தியிலும் மீளும் இந்தியப் பொருளாதாரம்..!

2 April 2021, 3:12 pm
Indian_EXport_UpdateNews360
Quick Share

இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி 58 சதவீதம் வளர்ச்சி பெற்று கடந்த மார்ச் மாதத்தில் 34 பில்லியன் டாலர்களை எட்டியது. இது இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதைக் குறிக்கிறது என அரசாங்கம் வெளியிட்ட ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக 2020-21 முழு நிதியாண்டிலும் ஏற்றுமதி 7.4 சதவீதம் வீழ்ந்து 290.18 பில்லியன் டாலராக சுருக்கியது.

“இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம் : மார்ச் 2021’இல் வணிக ஏற்றுமதி 58 சதவீதம் அதிகரித்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி ஜியின் வர்த்தகக் கொள்கைகள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் கூட இந்திய பொருளாதாரத்தை வரலாற்று ரீதியாக புதிய உயரத்தை அடையச் செய்துள்ளது.” என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.

இதே போல் இறக்குமதி மார்ச் மாதத்தில் 52.89 சதவீதம் அதிகரித்து 48.12 பில்லியன் டாலராக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 31.47 பில்லியன் டாலராக இருந்தது. மொத்த நிதியாண்டில், இது 18.07 சதவீதம் சுருங்கி 388.92 பில்லியன் டாலராக இருந்தது.

“மார்ச் மாதத்தில் இந்தியா நிகர இறக்குமதியாளராக உள்ளது. வர்த்தக பற்றாக்குறை 14.11 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டின் வர்த்தக பற்றாக்குறையான 9.98 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது, ​​41.4 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

கன்டெய்னர்கள் பற்றாக்குறை மற்றும் சரக்கு உயர்வு காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், ஏற்றுமதியில் திருப்புமுனை குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் சஹாய் தெரிவித்தார்.

“மார்ச் மாதத்தில் ஏற்றுமதி பொதுவாக அதிகமாக இருக்கும். இது பொதுவாக உச்ச பருவமாகும். துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஆண்டு ஏற்றுமதி கொரோனா ஊரடங்கால் சரிந்தது. தளவாடங்கள் தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும் வளர்ச்சி இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் எங்கள் ஏற்றுமதியை 340-350 பில்லியன் டாலர்களாக கொண்டு செல்ல எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியை நாங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.” என்று சஹாய் தெரிவித்தார்.

இதுபோன்ற உயர்ந்த அளவிலான ஏற்றுமதிகள் ஒவ்வொரு மாதமும் நிலையானதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்தார். ஆனால் ஒவ்வொரு மாதமும் 30 பில்லியன் டாலர் ஏற்றுமதியைக் கொண்டிருந்தாலும், 350 பில்லியன் டாலர்களை எளிதில் அடைய முடியும் என்று அவர் கூறினார்.

“மார்ச் 2021’இல் பெட்ரோலியம் அல்லாத மற்றும் கற்கள் அல்லாத மற்றும் நகை ஏற்றுமதியின் மதிப்பு 27.25 பில்லியன் டாலராக இருந்தது. இது 2020 மார்ச் மாதத்தில் 16.95 பில்லியன் டாலராக இருந்தது. இது 60.72 சதவீத வளர்ச்சியாகும். எண்ணெய் அல்லாத, ரத்தினங்கள் மற்றும் நகைகள் (தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள்) இறக்குமதி மார்ச் மாதத்தில் 27.01 பில்லியன் டாலராக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 18.70 பில்லியன் டாலராக இருந்தது. இது 44.45 சதவீத வளர்ச்சியாகும்.” என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply