டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்..! லட்சுமி விலாஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது..!

25 November 2020, 4:46 pm
Lakshmi_Vilas_Bank_UpdateNews360
Quick Share

தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த ஒரு மாத கால தடை, விதிக்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், மத்திய அமைச்சரவை இன்று லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

இதன் மூலம், ரூ 25,000’த்துக்கும் மேல் எடுக்க முடியாது என விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

நெருக்கடியில் இருந்த லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்தது மற்றும் வைப்புத் தொகையைத் திரும்பப் பெற வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த முடிவு 20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மற்றும் 4,000 ஊழியர்களின் சேவைகளை பாதுகாக்கும்.

லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி ஆரோக்கியம் மோசமடைவதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

முன்னதாக நவம்பர் 17’ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில், லட்சுமி விலாஸ் வங்கி தனது சேவைகளை மேற்கொள்ள ஒரு மாதகால தடை விதித்திருந்தது. மேலும் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ 25 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே நிறுவனங்கள் சட்டம், 2013’இன் கீழ் டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை ஒன்றிணைக்கும் வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி சமர்ப்பித்தது.

அதே சமயம் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள, கனரா வங்கியின் முன்னாள் தலைவரான டி.என்.மனோகரனை 30 நாட்களுக்கு வங்கியின் நிர்வாகியாக நியமித்தது.

இந்தியாவில் யெஸ் வங்கிக்கு அடுத்தபடியாக இரண்டாவது தனியார் துறை வங்கியாக லட்சுமி விலாஸ் வங்கி உள்ளது. இது இந்த ஆண்டில் கடினமான நெருக்கடி நிலைக்குச் சென்றது. முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில், யெஸ் வங்கி சிக்கலை எதிர்கொண்ட நேரத்தில்,  7,250 கோடி ரூபாயை வழங்கி, வங்கியில் 45 சதவீத பங்குகளை எடுத்துக்கொள்ள ஸ்டேட் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு உத்தரவிட்டு யெஸ் வங்கியை அரசாங்கம் மீட்டது.

இந்நிலையில் தற்போது லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைத்து மீட்டுள்ளது. இதன் மூலம் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கைகையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 23

0

0