88,000 ஊழியர்கள் பணிநீக்கம்..! பி.எஸ்.என்.எல். தனியார்மயம்..! பாஜக எம்பி அனந்த் குமார் ஹெக்டே அதிரடி..!
11 August 2020, 5:05 pmபாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனந்த் குமார் ஹெக்டே அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஊழியர்களை துரோகிகள் என்று கூறி புதிய சர்சையைக் கிளப்பியுள்ளார்.
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சிக்கலான தொலைத் தொடர்பு பொதுத்துறை நிறுவனத்தை காப்பாற்ற போதுமான அளவு உழைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் அது தனியார்மயமாக்கப்படும்போது 88,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.
“பிஎஸ்என்எல் துரோகிகளால் நிரப்பப்பட்ட ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. அவற்றை விவரிக்க நான் துல்லியமான சொற்களைப் பயன்படுத்துகிறேன்.” என்று பாஜக எம்பி அனந்த் குமார் ஹெக்டே, உத்தர கன்னட மாவட்டத்தின் கும்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சோம்பேறிகளாகவும் திறமையற்றவர்களாகவும் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
“அரசாங்கம் பணத்தை வழங்கியுள்ளது. மக்களுக்கு சேவைகள் வழங்க தேவையான உள்கட்டமைப்பு உள்ளது. ஆயினும், அவர்கள் (பிஎஸ்என்எல் ஊழியர்கள்) வேலை செய்யவில்லை. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்காக, நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. ஆயினும், அவர்கள் வேலை செய்ய தயாராக இல்லை.” என்று கூறிய ஹெக்டே மேலும், பொதுத்துறை நிறுவனத்தை சரிசெய்ய அரசாங்கத்திடம் உள்ள ஒரே தீர்வு, அதை தனியார்மயமாக்குவதும், 88,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதும்தான் என்று கூறினார் .
அரசாங்கம், கடந்த ஆண்டு, பி.எஸ்.என்.எல் மற்றும் அதன் துணை நிறுவனமான மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) தனியார்மயமாக்கப்படாது என்றும் புத்துயிர் திட்டத்தை வழங்குவதாகவும் உறுதியளித்தது.
முடங்கிப்போன பொதுத்துறை நிறுவனங்களுக்கான தினசரி பணப்புழக்கத் தேவை மற்றும் ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையை சமாளிக்க நான்கு தவணைகளாக ரூ 69,000 கோடி மறுமலர்ச்சி திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஒரு தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை (விஆர்எஸ்) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 53 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு 60 வயது வரை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றின் 125% ஊதியம் வழங்க அனுமதித்தது.
78,300 பேர் இத்திட்டத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் 14,500 கோடி ரூபாய் ஊழியர்கள் தொடர்பான செலவுகளில் 50% சேமிக்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழிவகை செய்துள்ளது. மேலும் எம்.டி.என்.எல்’இன் மொத்த பணியாளர்களில் 76% பேர் வி.ஆர்.எஸ். திட்டத்தைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.