முதல்முறையாக நஷ்டத்தை சந்தித்த ஓ.என்.ஜி.சி..! இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துக்கு வந்த சோதனை..!

30 June 2020, 10:13 pm
ongc_updatenews360
Quick Share

அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, அதன் முதல் காலாண்டு இழப்பை அறிவித்தது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளரான ஓ.என்.ஜி.சி  ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ 3,098 கோடி இழப்பை பதிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த பின்னர் நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பீட்டை பிரதிபலிக்கும் வகையில் 2019-20’ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ரூ 4,899 கோடி இழப்பை ஓ.என்.ஜி.சி பதிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஷி ஷங்கர் தெரிவித்தார்.

நான்காம் காலாண்டில் வருவாய் கடந்த வருடத்தின் இதே காலாண்டில் ரூ 26,759 கோடியாக இருந்த நிலையில் இந்த வருடம் ரூ 21,456 கோடியாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியும் முந்தைய நிதியாண்டில் 5.9 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது ஜனவரி-மார்ச் மாதங்களில் 5.82 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தேவை வீழ்ச்சியடைந்த பின்னர், இயற்கை எரிவாயு உற்பத்தி ஜனவரி-மார்ச் 2019’இல் 6.56 பிசிஎம்மில் இருந்த நிலையில் ஜனவரி-மார்ச் 2020’ல் 6.04 பில்லியன் கன மீட்டராக சரிந்தது.

நிறுவனத்தின் வெளிநாட்டுப் பிரிவான ஓ.என்.ஜி.சி விதேஷ் லிமிடெட் நிதியாண்டுக்கான நிகர லாபம் ரூ 1,682 கோடியிலிருந்து ரூ 454 கோடியாக குறைந்துள்ளதாக ஷங்கர் தெரிவித்தார்.

Leave a Reply