ஆன்லைன் பார்மசி வியாபாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்..! அமேசானுக்கு போட்டியாக களமிறங்கியது..!

19 August 2020, 9:58 am
Reliance_Updatenews360
Quick Share

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிறுவனம், ஆன்லைன் இ-பார்மா நிறுவனமான நெட்மெட்ஸில் பெரும்பான்மையான பங்குகளை சுமார் 620 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் இ-பார்மா வியாபாரத்தில் கடந்த வாரம் நுழைந்த அமேசானை முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் இப்போது எதிர்கொள்ளும். 

இது தொடர்பாக நேற்று பிற்பகுதியில் வெளியான ஒரு அறிவிப்பில், ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிறுவனம் விட்டாலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனமான நெட்மெட்ஸ் என அழைக்கப்படும் ஆன்லைன் மருந்துக் கடை நிறுவனத்திலும் பெரும்பான்மையான பங்குகளை 620 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு விட்டாலிக் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 60 சதவிகிதத்தையும், அதன் துணை நிறுவனங்களான ட்ரேசரா ஹெல்த் பிரைவேட் லிமிடெட், நெட்மெட்ஸ் மார்க்கெட் பிளேஸ் லிமிடெட் மற்றும் தாதா பார்மா டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் 100 சதவீத நேரடி பங்கு உரிமையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் டிஜிட்டல் அணுகலை வழங்குவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என ஆர்.ஆர்.வி.எல் இயக்குனர் இஷா அம்பானி தெரிவித்துள்ளார்.

“நெட்மெட்ஸின் இணைப்பு ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் நல்ல தரமான மற்றும் மலிவு விலையிலான சுகாதார பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் திறனை மேம்படுத்துகிறது. மேலும் நுகர்வோரின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை உள்ளடக்குவதற்கான அதன் டிஜிட்டல் வர்த்தக முன்மொழிவை விரிவுபடுத்துகிறது. நாடு தழுவிய டிஜிட்டல் உரிமையை உருவாக்குவதற்கான நெட்மெட்ஸின் பயணத்தால் நாங்கள் ஈர்க்கப்படுகிறோம். குறுகிய காலத்தில், முதலீடு மற்றும் கூட்டாண்மை மூலம் அதை விரைவுபடுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.” என்று அவர் கூறினார்.

விட்டாலிக் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், 2015’இல் இணைக்கப்பட்டன. மருந்தியல் விநியோகம், விற்பனை மற்றும் வணிக ஆதரவு சேவைகளின் வணிகத்தில் இவை ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்களை மருந்தாளுநர்களுடன் இணைக்கவும், மருந்துகள், ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளின் விநியோகத்தை செயல்படுத்தவும் அதன் துணை நிறுவனம் நெட்மெட்ஸ் எனும் ஒரு ஆன்லைன் மருந்தக தளத்தை இயக்குகிறது.

“நெட்மெட்ஸ் ரிலையன்ஸ் குடும்பத்தில் சேர்ந்து தரமான ஆரோக்கியத்தை மலிவு மற்றும் ஒவ்வொரு இந்தியரும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவது உண்மையில் ஒரு பெருமையான தருணம்.” என நெட்மெட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் தாதா கூறினார்.

அமேசான் இ-ஃபார்மா பிசினஸ் :

  • இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் அமேசான், தனது செயல்பாடுகளை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்தும் முயற்சியாக, அமேசான் பெங்களூரில் ஒரு ஆன்லைன் மருந்தகத்தை அறிமுகப்படுத்தியது.
  • அமேசான் தனது புதிய சேவையான ‘அமேசான் பார்மசி’ பெங்களூரில் மருந்துகளுக்கான ஆர்டர்களை ஏற்கத் தொடங்கியது.
  • அமேசான் பார்மசி பாரம்பரிய மூலிகை மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் மீட்டர், நெபுலைசர்கள் மற்றும் கையடக்க மசாஜர்கள் போன்ற சில சுகாதார சாதனங்களையும் விற்பனை செய்கிறது.
  • 2018’ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம், ஆன்லைன் பார்மசி ஸ்டார்ட் அப் நிறுவனமான பில்பேக்கை கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 57

0

0