வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஷாக்..! வட்டி வீதத்தை அதிரடியாக உயர்த்தியது எஸ்பிஐ..!
5 April 2021, 1:36 pmஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் இனி 6.95 சதவீதத்திலிருந்து தொடங்கும். வட்டி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, கடந்த மார்ச் மாதத்தில் வீட்டுக் கடன் குறித்த சிறப்பு சலுகையை அறிவித்தது. இதன் மூலம் 6.70 சதவீதத்திலிருந்து வட்டி விகிதத்தில் எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன்களை வழங்கியது. இந்த சலுகை மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய வட்டி வீதம் (குறைந்தபட்சம்) இப்போது 6.95 சதவீதமாக உள்ளது.
இதே போல் வீட்டுக் கடன்களில் ஒருங்கிணைந்த பிராசஸிங் கட்டணத்தையும் வங்கி விதிக்கும். இது கடன் தொகை மற்றும் ஜிஎஸ்டியில் 0.40 சதவீதமாக இருக்கும். முன்னதாக, மார்ச் மாதத்தில் எஸ்பிஐ வீட்டுக் கடன் பிராசஸிங் கட்டணத்தை மார்ச் 31 வரை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறைந்தபட்ச வீட்டுக் கடன் வட்டி விகித உயர்வை பின்பற்றி மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சொத்துக்கள், வைப்புத்தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியாகும். இது நாட்டின் மிகப்பெரிய அடமானக் கடன் வழங்குநராகவும் உள்ளது. வங்கியின் வீட்டுக் கடன் இலாகா நிர்ணயித்த இலக்கான ரூ 5 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0