செயற்கை விலையேற்றம் மூலம் மக்களை சுரண்டும் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள்..! நிதின் கட்கரி தாக்கு..!

11 January 2021, 10:45 am
Nitin_Gadkari_UpdateNews360
Quick Share

சிமெண்ட் மற்றும் ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிக கட்டணங்களை வசூலிப்பதன் மூலம் மக்களை சுரண்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததோடு, இதற்கான ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளார்.  

இந்திய பில்டர்ஸ் அசோசியேஷனின் மேற்கு பிராந்திய பிரிவின் கூட்டத்தில் உரையாற்றிய கட்கரி, இரு தொழில்களும் அதிக விலைகளை வசூலித்தால், அது உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

“சிமெண்ட் தொழிற்சாலைகள் நிலைமையை தங்களுக்கு மட்டுமே சாதகமாகப் பயன்படுத்தி சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இது தேசிய நலன்களுக்காக அல்ல. அடுத்த 5 ஆண்டுகளில் 111 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஸ்டீல் மற்றும் சிமெண்ட் விகிதங்கள் இப்படி தொடர்ந்தால், அது எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.” என்று கட்கரி கூறினார்.

ஸ்டீல் நிறுவனங்கள் தங்கள் ஆற்றல் மற்றும் தொழிலாளர் செலவுகளை அதிகரிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அதிக விலைகளை வசூலிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

“சிமெண்ட் மற்றும் ஸ்டீல் துறையில் ஒரு ரகசிய சிண்டிகேட் உள்ளது. ஒவ்வொரு ஸ்டீல் நிறுவனத்திற்கும் அதன் சொந்த இரும்பு தாது சுரங்கங்கள் உள்ளன மற்றும் தொழிலாளர் மற்றும் மின் செலவுகளில் அதிகரிப்பு இல்லை. ஆனால் இந்த கூட்டமைப்பு தொடர்ந்து விலையை அதிகரித்து வருகின்றன.” என அவர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு நாளைக்கு 40 கி.மீ சாலைகள் அமைக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இலக்கு வைத்துள்ளதாக கட்கரி மேலும் தெரிவித்தார். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60,000 கி.மீ நெடுஞ்சாலைகளை உருவாக்க தேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தேசித்துள்ளதாகவும், அதில் 2,500 கி.மீ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தில் 9,000 கி.மீ பொருளாதார காரிடார்கள், கடலோர மற்றும் எல்லை சாலைகளுக்கு தலா 2,000 கி.மீ. மற்றும் 100 சுற்றுலா தலங்களை 45 நெடுஞ்சாலைகள் வழியாக இணைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று கட்கரி கூறினார்.

மேலும், சிமெண்ட், ஸ்டீல் நிறுவனங்களின் செயற்கை விலையேற்றம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்துள்ளதாகவும், இதை ஒழுங்குபடுத்த ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரத்திற்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கை எழுந்துள்ளது.