20 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் மற்றும் கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் இந்தியாவிற்கு நன்கொடை..! வால்மார்ட் நிறுவனம் அறிவிப்பு..!

1 May 2021, 5:42 pm
Walmart_UpdateNews360
Quick Share

உயிர்காக்கும் ஆக்சிஜன் வாயுவை சேமிப்பதற்கும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்புவதற்கும், பிரபல அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனமான வால்மார்ட், 20 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளையும், 20 கிரையோஜெனிக் கொள்கலன்களையும் இந்தியாவுக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் பேரழிவு தரும் எழுச்சியை எதிர்த்துப் போராட உதவும் வகையில் அரசு சாரா நிறுவனங்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவதாகவும் அமெரிக்க சில்லறை நிறுவனமான வால்மார்ட் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், சுகாதார வசதிகள் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆக்சிஜன் சப்ளையில் கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில் வால்மார்ட்டின் அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“வால்மார்ட் 20 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்காக 20 கிரையோஜெனிக் கொள்கலன்கள், அத்துடன் 3,000’க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 500 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சையை வழங்குவதற்காக நன்கொடை அளிக்கும்” என்று வால்மார்ட் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவை இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விநியோகத்திற்காக நன்கொடையாக அளிக்கப்படும்.

வால்மார்ட் மற்றும் வால்மார்ட் அறக்கட்டளை ஆகியவை அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டாளர் மன்றத்தின் கூட்டு நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதலாக 2,500 ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு நிதியளிக்க உறுதியளித்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வால்மார்ட் ஒரு உலகளாவிய குடும்பம். இந்த அழிவுகரமான எழுச்சியின் தாக்கத்தை இந்தியா முழுவதும் உள்ள எங்கள் கூட்டாளிகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மீது நாங்கள் உணர்கிறோம். எங்களால் முடிந்தவரை ஆதரவளிக்க நாங்கள் ஒன்றிணைவது முக்கியம்.” என்று வால்மார்ட் இன்க் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டக் மெக்மில்லன் மேற்கோளிட்டுள்ளார்.

Views: - 214

0

0

Leave a Reply