கூலியில் இடம்பெற்ற ரெட்ரோ பாடல்? மயான அமைதியில் திரையரங்கம்! ஒருத்தரும் கண்டுக்கலையே?
Author: Prasad18 August 2025, 4:37 pm
லோகேஷ் படங்களில் இடம்பெறும் ரெட்ரோ பாடல்!
லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் எதாவது ஒரு காட்சியில் கிளாசிக் பாடல் துணுக்கு இடம்பெறுவது வழக்கம். அப்படி இடம்பெறும் பாடல் டிரெண்டாவதும் வழக்கம். “கைதி” திரைப்படத்தில் சண்டை காட்சியின் பின்னணியில் “ஆசை அதிகம் வச்சி” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அதன் பின் அப்பாடல் இணையத்தில் டிரெண்டானது.
அது போல் “விக்ரம்” திரைப்படத்தில் ஒரு சண்டை காட்சியில் மன்சூர் அலிகானின் “சக்கு சக்கு வத்திக்குச்சி” என்ற பாடல் இடம்பெற்றது. அதுவும் டிரெண்டிங் ஆனது. அதன் பின் லியோ படத்தில் “கரு கரு கருப்பாயி” பாடல் இடம்பெற்றிருந்தது. அதுவும் டிரெண்டானது. இவ்வாறு லோகேஷ் படத்தில் இடம்பெறும் கிளாசிக் பாடல்கள் டிரெண்டாவது வழக்கமான ஒன்றாக ஆகிப்போனது.

கூலியில் இடம்பெற்ற பாடல்!
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான “கூலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இத்திரைப்படத்திலும் ஒரு காட்சியில் ரெட்ரோ பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
பிரசாந்த், அஜித்குமார் ஆகியோரின் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “கல்லூரி வாசல்”. இத்திரைப்படத்தில் தேவாவின் இசையில் இடம்பெற்ற “லயோலா காலேஜ் லைலா” என்ற பாடல் “கூலி” படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருந்தது. ஆனால் அக்காட்சி திரையில் இடம்பெற்றபோது திரையரங்குகளில் மயான அமைதி நிலவியது. பார்வையாளர்கள் எவரும் அந்த பாடலை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே “கூலி” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன. அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்ற ரெட்ரோ பாடலை எவரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
