கூலி படத்திற்கு குழந்தைகளை அனுமதிக்காததால் வாக்குவாதம்! கோவை திரையரங்கில் பரபரப்பு
Author: Prasad16 August 2025, 2:34 pm
A Certificate
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்றது.
இதனிடையே இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் வழங்கியிருந்தது. இத்திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் இத்திரைப்படத்தை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க அனுமதி கிடையாது. ஆதலால் இதற்கு “A” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த விழிப்புணர்வு இல்லாத ரசிகர்கள் பலர் குடும்பத்துடன் டிக்கெட் புக் செய்து விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது.

குழந்தைகளை மறுத்ததால் வாக்குவாதம்
கோவையின் புரொசோன் மால் என்ற வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஐநாக்ஸ் திரையரங்கத்தில் தனது பிள்ளைக்குட்டிகளுடன் ரசிகர்கள் பலரும் “கூலி” படத்தை பார்க்கச் சென்றுள்ளனர். ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்து தங்களது குழந்தைகளை அழைத்துச்சென்றிருந்தனர்.
ஆனால் “கூலி” படத்தை பார்க்க 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் திரையரங்கு நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் திரையரங்கு நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தங்களது டிக்கெட் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரசிகர்கள் பலரும் திரையரங்கு நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு திரையரங்கு நிர்வாகத்தினர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட செயலியில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என பதிலளித்ததால் வாக்குவாதம் முற்றியது. இச்சம்பவம் புரொசோன் மாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அங்கிருந்த நபர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வைரல் ஆகியும் வருகிறது.
‘கூலி’ படத்திற்கு A சான்றிதழ்.. கோவை Prozone மாலில் ஐநாக்ஸ் திரையரங்கில் குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு… திரையரங்க ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்#Coimbatore | #Inox | #Children | #Coolie | #Rajinikanth50 | #updatenews | #updatenews360 pic.twitter.com/4PIygLRBaG
— UpdateNews360Tamil (@updatenewstamil) August 16, 2025
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் தளங்களில் ‘A’ சான்றிதழ் குறித்து தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும், பணத்தை திருப்பி வழங்குவதற்கு எளிய வழிமுறைகள் இருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
