சின்மயியால் ஓரங்கட்டப்பட்ட பாடகி தீ? மொத்த ரசிகர்களின் கவனத்தையும் அள்ளிக்கொண்ட தரமான சம்பவம்!
Author: Prasad28 May 2025, 11:32 am
முத்த மழை
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது.

இத்திரைப்படத்தில் பாடகி தீ பாடிய “முத்த மழை” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால் “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்பாடலை சின்மயி பாடினார். சின்மயியின் குரல் ரசிகர்களை பெரிதும் வசீகரித்த நிலையில் “தீயின் குரலை விட சின்மயியின் குரல் லயிக்கவைக்கிறது” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சின்மயி பாடிய “முத்த மழை” பாடல் இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
சின்மயியிக்கு தடை
“முத்த மழை” பாடலை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சின்மயிதான் பாடியிருந்தார். ஆனால் தமிழில் தீ பாடியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் “ஏன் சின்மயியை தமிழில் பாடவைக்கவில்லை?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் 2018 ஆம் ஆண்டு வைரமுத்து உள்ளிட்ட சினிமாத்துறையினர் பலரின் மீது “Me Too” குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார் சின்மயி.
இதனை தொடர்ந்து டப்பிங் யூனியனில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். Me Too பிரச்சனையை பூதாகரமாக எழுப்பிய காரணத்தினால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டாலும் அவர் சரியாக சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தால்தான் வெளியேற்றப்பட்டார் என டப்பிங் யூனியன் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் பாட எந்த வாய்ப்பும் வரவில்லை. எனினும் இந்த தடையை எல்லாம் மீறி “லியோ” திரைப்படத்தில் திரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுக்க அவருக்கு வாய்ப்பு வழங்கினார் லோகேஷ் கனகராஜ். சின்மயியிக்கு இருக்கும் தடையால்தான் அவரை “தக் லைஃப்” திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் பாட வைக்க முடியவில்லை என பலரும் கூறி வருகின்றனர். எனினும் “முத்த மழை” பாடலில் சின்மயியின் குரல் ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில் பாடகி தீ ஓரங்கட்டப்பட்டுள்ளதாக பலர் விமர்சனம் வைப்பதும் குறிப்பிடத்தக்கது.