திரைக்கதை முற்றிலும் சொதப்பல்? ரஜினிகாந்தின் “கூலி” தேறுமா தேறாதா? முழு விமர்சனம் இதோ…
Author: Prasad14 August 2025, 1:30 pm
வெளியானது கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் இன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
கிரிஷ் கங்காதரன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா என பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
படத்தின் கதை
துறைமுகத்தில் தங்க கடத்தலில் மன்னனாக திகழ்ந்து வருகிறார் நாகர்ஜுனா. அவருக்கு வலது கையாக இருக்கிறார் சௌபின் சாஹிர். தனக்கு கீழ் வேலை செய்யும் கூலி ஆட்களில் தனக்கு எதிராக செயல்படும் கருப்பு ஆடுகளை நாகர்ஜுனா வேட்டையாடி வருகிறார். இந்த நிலையில் கூலி ஆட்களில் ஒரு போலீஸ் உளவாளி இருப்பது தெரிய வருகிறது.
இந்த நிலையில்தான் தனது நண்பன் சத்யராஜின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வருகிறார் ரஜினிகாந்த். சத்யராஜின் சாவில் மர்மம் இருப்பது தெரிய வருகிறது. சத்யராஜை ஏன் கொலை செய்தார்கள்? தனது நண்பனின் மரணத்திற்கு ரஜினிகாந்த் பலி தீர்க்கிறாரா? என்பதுதான் மீதி கதை.

படத்தின் பிளஸ்
இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது ரஜினிகாந்துதான். இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பான மற்றும் ஸ்டைலான நடிப்பு பார்வையாளர்களை அசரவைக்கிறது. வசனம் பேசும் மாடுலேஷனும் பாடி லேங்குவேஜும் அசத்தலாக இருக்கிறது. ரஜினிகாந்திற்காகவே இப்படத்தை பார்க்கலாம். நாகர்ஜுனா சௌபின் சாஹிர் ஆகியோர் இப்படத்திற்கு கூடுதல் பலம். நாகர்ஜுனாவின் கதாபாத்திர வடிவமைப்பும் அவரது வில்லத்தனமான நடிப்பும் படுபயங்கரம்.
சௌபின் சாஹிரின் கதாபாத்திர வடிவமைப்பும் அவரது தனித்துவமான நடிப்பும் அசரவைக்கிறது. ஆமிர் கான் மற்றும் உபேந்திராவின் என்ட்ரி அசத்தல். ஃபிளாஷ்பேக்கில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இள வயது ரஜினிகாந்தை நம் கண் முன் கொண்டு வந்திருக்கின்றனர். சென்டிமண்ட் காட்சிகளில் ஸ்ருதிஹாசனின் இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
இத்திரைப்படத்தின் மற்றொரு பெரிய பலம் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும் அன்பறிவின் சண்டை காட்சிகளும். இருவரும் மிரட்டி எடுத்திருக்கிறார்கள். சத்யராஜ்ஜின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. ஃபிளோமின் ராஜின் படத்தொகுப்பு புகுந்து விளையாடியிருக்கிறது.
படத்தின் மைன்ஸ்
இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் கதையசமும் திரைக்கதையும்தான். கதையில் எந்த வித சுவாரஸ்யமும் இல்லை. முதல் பாதியில் திரைக்கதை சற்று சொதப்புவிடுகிறது. கடைசி 20 நிமிடங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய காட்சிகளில் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சி சிறப்பாக இருந்தது என்றாலும் அந்த இடத்தில் ஃபிளாஷ்பேக் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. அனிருத் இசையமைக்கும் திரைப்படங்களில் அனிருத்தின் இசை அத்திரைப்படங்களுக்கு பலமாக அமையும். ஆனால் “கூலி” படத்தில் கொஞ்சம் ஓவர்டோஸ் கொடுத்துவிட்டார் என்றே தோன்ற வைக்கிறது.
ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பிற்காகவும் ஆக்சன் காட்சிகளுக்காகவும் ஒரு முறை இப்படத்தை பார்க்கலாம்.
